• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கற்பனை கதைகள்]

பத்து சூரியர் கதை

பண்டைக்காலத்தில் ஆகாயத்தில் பத்து சூரியன்கள் இருந்தன. ஒற்றைச் சூரியன் சுட்டெரிப்பதையே நம்மால் தாங்க முடியவில்லையே!பத்துச் சூரியன்களின் வேகம் லேசாகவா இருக்கும்?அவற்றின் வெப்பம் தாங்காமல் வயல்கள் வறண்டன. பயிர்கள் கருகின. மக்கள் வாடிவதங்கி, நினைவிழந்து தரையில் சுருண்டனர். நதிகள் கொதித்தன. காடுகள் தீப்பற்றி எரிந்தன. அவற்றில் இருந்து தப்பித்த கொடிய மிருகங்களும் பறவைகளும் மனிதர்களைத் தாக்கப்பாய்ந்தன. மக்கள் படும் வேதனையைக் கண்டு மனமுருகின சொர்க்க லோகத் தெய்வங்கள்.

மண்ணுலகில் ஒழுங்கை நிலைநாட்ட ஹுயி என்னும் வில்லாளி ஒருவனை சொர்க்க லோகப் பேரரசர் அனுப்பிவைத்தார். அவனுடன் அழகிய மனைவியும் வந்தாள். பேரரசர் கொடுத்த சிவப்பு வில்லையும், வெள்ளை அம்புகளையும் பிடித்த படி அவன், தனது அழகிய மனைவியுடன் இந்த பூமியில் இறங்கினான்.

முதலில் இந்த பத்து சூரியன்களையும் பேசிச் சரிக்கட்டி விடலாம் என்று தான் பார்த்தான். நீங்க பத்து சூரியர்களும் முறைவைத்து ஒரு நாளைக்கு ஒருவரா இந்தப் பூமிக்கு வாங்க, இந்த மக்கள் பாவம் இல்லையா? இந்தப் பூமிக்கு வெளிச்சமும் வெப்பமும் கொடுங்க, அளவுக்கு அதிகமா சுட்டெரிக்காதீங்க என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் சூரியர்கள் யாருமே காதுகொடுத்துக் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் போர் தொடங்கினான். சிவப்பு வில்லை வளைத்தான். அடங்காப்பிடாரிகளான சூரியர்களை ஒருவர் பின் ஒருவராக குறிவைத்து அம்பு எய்தான். ஒன்பது சூரியர்கள் ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தனர்.

மக்களின் நாயகனாக மாறிவிட்டான் ஹுயி, இது மற்ற தெய்வங்களின் பொறாமையைத் தூண்டிவிட்டது. அவை, பேரரசரிடம் இவனைப் பற்றி போட்டுக்கொடுத்தன. அவரும் நம்பிவிட்டார். வில்லாளி ஹுயியையும், அவனுடைய மனைவியையும் சொர்க்கத்தில் இருந்து விரட்டி விட்டார். அவன் இந்தப் பூமியில் வேட்டையாடிப் பிழைக்க வேண்டியிருந்தது.

எனக்காக அழகான மனைவி காட்டில் அலைந்து திரிந்து கஷ்டப்பட வேண்டியிருக்கே என்று வேதனைப்பட்டான், ஹுயி. அப்போது மேற்குத் தேவதையான ராணியம்மா அவன் முன்பு தோன்றி ஒரு மருந்தைக் கொடுத்தாள். அது ஜீவரசம். அதைப் பருகியவர்களுக்கு அழிவில்லை. நேரே விண்ணுலகம் சென்றுவிடலாம். ஆனால் பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல, அந்த மருந்து ஒரு ஆளுக்குத்தான் போதுமானதாக இருந்தது. இருவர் குடிக்க முடியாது. ஆகவே அதை தனது மனைவியின் பார்வையில் பட்டு விடாமல் ஒளித்து வைத்தான். மனைவியிடம் இருந்து எதையாவது மறைக்க முடியுமா என்ன?பூலோக வாழ்க்கையால் வெறுத்துப்போன மனைவியின் பார்வையில் பட்டுவிட்டது. அந்த ஜீவரசம், அவளும், கணவன் இல்லாத நேரமாகப் பார்த்து அதைக்குடித்து விட்டு, விருட்டென்று பறந்தாள் விண்ணுலகத்துக்கு. நிலவில் போய் குடியேறினாள். மனமுடைந்த போன ஹுயி, நிலவை வீழ்த்த முடியாமல் தவித்தான். தன்னந்தனியாக பூமியில் வாழ்ந்தான். வேட்டையாடியும் வில்வித்தை கற்றுக்கொடுத்தும் பிழைப்பு நடத்தினான். அவனிடம் கற்ற ஒரு மாணவனுக்கு தன்னுடைய குரு ஏதோ சுகமான வாழ்க்கை நடத்துவதாகத் தோன்றியது. ஹுயி குடிபோதையில் இருந்த போது, அம்பு எய்து கொன்று விட்டான். நிலாவில் அரண்மனை கட்டி வாழ்ந்த ஹுயியின் மனைவிக்கும் நிம்மதியான வாழ்க்கை இல்லை. ஏனென்றால் அவளுக்குத் துணையாக இருந்தது ஒரு சின்னஞ்சிறு முயல் மட்டுமே.

அந்த அழகிய மனைவியின் பெயர் சாங் யே. அவள் ஜீவரசம் பருகி, கணவனை பூலோகத்தில் தன்னந்தனியாக விட்டு விட்டு, நிலைவுக்குப் பறந்து சென்றது சீன மக்களிடையே காலங்காலமாக ஒரு நாட்டுப்புறக்கதையாக வழங்கிவருகிறது. அவளுடைய நிலவுப் பயணத்தை நிலாப்பண்டிகையாக, சீன மக்கள் கொண்டாடுகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040