• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கற்பனை கதைகள்]

சூரியனைத் துரத்திய கதை

விண்ணும் மண்ணும் தனித்தனியே பிரிந்த நீண்ட காலத்திற்குப் பிறகு, காட்டில் ஒரு அரக்கர் குலம் வசித்தது. அதன் தலைவன் குவாஃபு, தங்கப் பாம்புகளை காதுத்தோடுகளாகவும் கைகளில் காப்புக்களாகவும் அணிந்திருந்தான். அஞ்சாநெஞ்சத்துடனும் அறிவாற்றலுடனும் அவர்கள் கட்டுப்பாடின்றி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள்.

ஒரு வருடம், கோடை வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியது. சூரியன் சுட்டெரித்தான். நதிகள் வறண்டன. மரங்கள் வாடிக்கருகின. குவாஃபு குல மக்கள் ஒருவர்பின் ஒருவராக குடிக்க நீரின்றி மடிந்தனர். குவாஃபு துக்கத்தில் ஆழ்ந்தான். சூரியனைக் கட்டிப்போடுவதாக, தனது குடிமக்களிடம் சூளுரைத்தான். என்ன ஆனாலும் சரி, இந்தச் சூரியனை ஒருகை பார்க்காமல் விடுவதில்லை என்று தீர்மானித்தான். அவனது குடிமக்கள் பயமுறுத்திய போதும் சூரியனைத் துரத்தத் தொடங்கினான்.

முதலில், சூரியனை நோக்கி ஓடினான். காற்றாகக் கடுகிவிரைந்தான். ஆயினும் சூரியனும் அவனை விட வேகமாக ஓடினான். மலைகளின் மீது தாவி, ஆறுகளைத் தாண்டி ஓடியபோது, அவனது காலடிகளின் அழுத்தம் தாங்காமல் நிலம் அதிர்ந்தது. பல நாட்கள் ஓடினான். ஆனாலும் சூரியன் வெகுதொலைவில் அப்பால் இருந்தான். தனது காலணியில் ஒட்டிக்கொண்ட மண்ணை உதறுவதற்காக நின்ற போது, அந்த மண் சிறு மலையாக மாறியது. கடைசியில் ஒரு நாள் சூரியன் மறைவதற்கு முன் அதைப் பிடித்து விட்டான். அதைத் தனது கைகளால் மடக்கி, கட்டிப்போட நினைத்தான். ஆனால் சூரியனோ சூடாக இருந்ததால் விட்டுவிட்டான். அதற்குள் அவனுக்குத் தாகம் எடுத்தது. உடனே மஞ்சள் ஆற்றுக்கு ஓடிப் போய் அதன் தண்ணீர் முழுவதையும் குடித்தான். அப்படியும் தாகம் தணியவில்லை. மேற்குத் திசையில் உள்ள வெய் நதி நோக்கி ஓடினான். அப்படியும் தாகம் தீராமல், வடதிசையில் உள்ள பெரிய ஏரியை நோக்கி ஓடினான். ஆனால், வழியிலேயே தாகம் அதிகரித்து நாவறட்சியால் இறந்தான் மரண மடைந்த போது தனது மக்களுக்காக வேதனைப்பட்டான்.

தனது கடைசிபலத்தை எல்லாம் திரட்டி, தன்னுடைய ஊதா கோடாரியை மேற்குத் திசை நோக்கி வீசினான். அந்தக் கோடாரி ஆழகான ஒரு பீச் பழத்தோட்டமாக மாறியது. இப்போது கூட வழிப் போக்கர்கள் அந்த சுவையான பீச் பழங்களைத் தின்று தாகத்தைத் தணிக்க முடிகிறது.

வறட்சியைத் தாக்குப்பிடித்து எதிர்த்து நிற்கும் சீன மக்களின் மன உறுதியை குவாஃபுவின் கதை காட்டுகிறது. குவாஃபு மடிந்தாலும், அவனுடைய விடா முயற்சி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது இன்றைக்கும் சில மலைகளுக்கு குவாஃபு மலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040