• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கற்பனை கதைகள்]

மனிதர்களைப் படைத்த தேவதை நு வா

மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான்? இயேசு மனிதனைப்படைத்ததாக யூதக் கதைகள் கூறுகின்றன. படைப்புக்கடவுள் பிரம்மா என்று இந்துமத புராணம் கூறுகிறது. பண்டைய எகிப்தில், தெய்வங்களின் கட்டளைப்படி மண்ணுலகில் மனிதன் தோன்றியதாக கூறப்படுகிறது. கிரேக்கக் கதைகளோ, புரோமெத்தியஸ் என்ற தெய்வம்தான் மனிதனைப் படைத்தது என்று கூறுகின்றன. புல்லாகி, புழுவாகி, விலங்காகி, இறுதியில் குரங்கில் இருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் என்பது அறிவியல் அறிஞர்டா கூறும் கூற்று, ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பிர்க் அருகே.

தோன்றினான் என்பது புதைபடிவங்களில் இருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டுப்புறக் கதைகளோ, பெண்ணைப் போன்ற உடலமைப்பும் டிராகன் போன்ற வாலும் உடைய நு வா என்ற தேவதைதான் மனிதனை உருவாக்கியது என்று கதைகட்டுகின்றன. இந்தக் கட்டுக்கதையைப் பார்ப்போம்.

மண்ணையும் விண்ணையும் பன்கு தனித்தனியே பிரித்த பிறகு அங்கே தேவதை நு வா தோன்றியது. மண்ணுலகில் பறவைகள் கீச்சிட்டன. விலங்குகள் உறுமின. மீன்கள் நீந்தின. பூச்சிகள் பறந்தன. இவை எல்லாமே நு வா தேவதைக்கு மிகவும் பிரியமானதாக இருந்தது. ஆனாலும் மொத்தத்தில் ஏதோ உயிரற்ற ஜடமாகவே எல்லாமே தோன்றின. ஒரு நாள், மஞ்சள் நதியின் தெள்ளத்தெளிவான நீரில் தனது அழகிய நிழலைக் கண்டாள் நு வா உடனே, தனக்கு ஒரு தோழமை வேண்டும் என்ற உணர்வு அவளுடைய உள்ளத்தில் துளிர்விடத் தொடங்கியது. தனது கலை நயம் மிக்க கைகளால், மஞ்சள் ஆற்றுப் படுகையில் கிடைத்த மஞ்சள் களிமண்ணை பிசைந்து, தன்னைப் போன்ற சின்னஞ் சிறு உருவங்களை உருவாக்கினாள். ஆனாலும் ஒரு வித்தியாசம். அந்தப் பொம்மைகளுக்கு வாலுக்குப் பதிலாக இரண்டு கால்களைப் படைத்தாள், அந்த மண்பொம்மைகளுக்கு உள்ளே தனது சுவாசக்காற்றை ஊதினாள். உடனே மண்பொம்மைகள் உயிர் பெற்றன. அவை, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தன. புத்திசாலித்தனமாகப் பேசின. அவற்றுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டாள் நு வா, மேலும் அவற்றுக்கு ஆண் மற்றும் பெண் தன்மைகளை ஊட்டி, ஆணாகவும் பெண்ணாகவும் பிரித்தாள்.

இந்த உயிர்த்துடிப்புள்ள பொம்மைகளைக் கண்டு உவகை கொண்ட நு வா, கூடிய மட்டிலும் ஏராளமான மனிதர்களை உருவாக்கிவிட வேண்டும் என்று விரும்பினாள். அப்படிப் படைக்கப்படும் மனிதர்கள் பூமியின் எட்டுத் திசைகளிலும் பரவ வேண்டும் என்று நினைத்தாள். ஆனாலும் ஒவ்வொரு மனித உருவமாகப் படைத்து களைத்துப் போனாள். அப்போது ஒரு யோசனை உதித்தது. ஒரு கயிற்றை மஞ்சள் ஆற்றுப் படுகைக்குள் வீசிப்போட்டு, களிமண்ணைக் கிளறி, அந்தக் கயிற்றை ஆகாயத்தை நோக்கி வீசினாள் அப்போது தெறித்த சின்னச்சின்ன களிமண் பொட்டுக்களும் மனிதர்களாக மாறின. இவ்வாறாக, உலகெங்கும் மனிதர்கள் நிறைந்தனர்.

பிறந்த மனிதன் இறக்கத்தானே வேண்டும். ஆனால், மனித குலத்தின் படைப்பு நின்றுவிடக் கூடாதே. ஆகவே, ஆண்களையும் பெண்களையும் நு வா ஜோடி சேர்த்தாள். இதனால் அவர்கள் தாங்களாகவே தங்களது குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040