• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கற்பனை கதைகள்]

நட்சத்திரங்களின் காதல்

கோடைகாலத்தில் இரவில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் இரண்டு நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். சீன நாட்டுப்பறக் கதைகளில், அல்ட்டேயர், வேகா எனப்படும் அந்த இரண்டு நட்சத்திரங்களைப் பற்றிய ஒரு காதல்கதை உண்டு. ஒரு ஏழை மேய்ப்பன், சொர்க்கப்பேரரசரின் பேத்தி மீது கொண்ட காதலாக அது சித்திரிக்கப்படுகிறது.

நியூலாங் எனப் பெயர் கொண்ட அந்த மேய்ப்பன் ஒரு இளம் விவசாயி. தன்னுடைய கிழட்டு எருதைக் கொண்டு, அவன் கடினமாக உழைத்துப் பிழைத்துவந்தான். அவனுடைய சிறுவயதிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். அதனால் அவன் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து களைத்தப்போய், தனக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காத நிலையிலும், கிழட்டு எருதைக் கவனிக்கத் தவறவில்லை. ஒரு நாள் அவன் வீடு திரும்பிய போது, அவனுக்கு ஒரே ஆச்சரியம். துணிகள் சுத்தமாகத் துவைக்கப்பட்டிருந்தன. மேஜை மீது இரவு உணவு தயாராக இருந்தது. பல நாட்களாக, இது நீடித்தது. இதைச் செய்வது யார் என்று புரியாமல் நியூலாங் திகைத்தான். இதை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தான். ஒரு நாள், வெளியே போவது போல் பாசாங்கு செய்து விட்டு, வீட்டுக்குப் பின்னால் ஒளிந்திருந்தான். விரைவிலேயே ஒரு அழகிய இளம் பெண் அவனுடைய வீட்டுக்கு வந்து எல்லா வீட்டு வேலைகளையும் செய்து முடித்தாள், நியூலாங்கிடம் பிடிபட்ட அந்தப் பெண், தனது பெயர் ச்சி னூ என்று சொன்னாள். நெசவு பெண் என்று அதற்கு அர்த்தம். அவன் கடினமாக வேலை செய்வதைக் கண்டு, ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்ததாகக் கூறினாள். அவளுடைய அன்பை நியூலாங் புரிந்து கொண்டான். காதல் கொண்டான். தனஅனை மணந்து கொள்ளுமாறு ச்சி னூவிடம் கேட்டான். அவளும் உடன்பட்டாள். ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுத்து என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

ஒரு நாள் ச்சி னூ கடத்தப்பட்டாள். யாரோ அவளைக் கடத்திக்கொண்டு, திரும்ப சொர்க்கத்திற்கே கூட்டிச் சென்றனர். தனது பேத்தி பூமியில் ஒரு சாதாரண மனிதனைத் திருமணம் செய்து கொண்டதால் கோபம் கொண்ட கொர்க்கப் பேரரசர், தனக்குக் கீழ்ப்படியாத பெண்ணை இழுத்துவரும்படி தனது மனைவியான பேரரசியை அனுப்பிவைத்தார்.

வீடு திரும்பிய நியூலாங், தனது மனைவி காணாமற்போனதை அறிந்து கண்ணீர் விட்டுக் கதறினான். திடீரென அந்தக் கிழட்டு எருது பேசத் தொடங்கியது. தன்னைக் கொன்று, அந்த மாட்டுத் தோலை நியூலாங் அணிந்து கொண்டால், சொக்கத்திற்குப் போய் மனைவியைத் தேடலாம் என்று சொன்னது. வேறு வழியின்றி, அந்த மாட்டைக் கொன்றான், மாட்டுத்தோலின் மந்திரசக்தியால், தனது மனைவியைத் தூக்கிச் செல்லும் பேரரசியைத் துரத்திச் சென்றான். பேரரசியோ தனது கொண்டை ஊசியைக் கழற்றி, அதனால் வானத்தைக் கிழித்தாள் கிழிபட்ட வானம் காட்டாற்று வெள்ளமாய் சீறிப்பாய்ந்து, கணவளையும் மனைவியையும் பிரித்தது. அவர்கள் படும் வேதனையைக் கணட பேரரசர் மனமிரங்கி, நியூலாங் தனது மனைவியை ஆண்டுக்கு ஒரு தடவை சந்திக்க அனுமதித்தார். அன்றில் இருந்து சி ஷி எனப்படும் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் நியூலாங் தனது மனைவி ச்சி னுவைச் சந்திக்கிறான்.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040