ஒவ்வொரு ஓட்டலிலும் ஒரு கேஸினோ என்றழைக்கப்படும் சூதாட்ட விடுதி இருக்கிறது. எங்கெங்கும் கண்ணை பறிக்கும் விளக்குகள் சுற்றிலும் சீட்டு கட்டுக்கள், அவற்றில் பல்வேறு வகையான விளையாட்டுக்கள், போட்டி நிபந்தனைகள் என்று இருக்கிறது. இங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எங்கு திரும்பினாலும் விளக்குகள், அலங்கர சூதாட்ட டேபிள்கள், சுற்றிலும் மக்கள் கூட்டம், என பார்த்தால் ஏதோ ஒரு உலகிற்கு வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. சுதாட்ட நகரங்களின் சொர்க்கம் என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தின் மொத்த வருமானமும் சூதாட்டம் மூலமே கிடைக்கிறது. இந்த ஹோட்டல்களே அடிதளத்தில் பேருந்துக்களையும் இயக்குவதால் யாரும் எந்த ஹோட்டலில் தங்கினாலும் எந்த பேருந்திலும் ஏறி நாம் செல்லும் இடங்களில் இறங்கி கொள்ளலாம். இதை தவிர மெட்ரோ வசதியும் உள்ளது.
சீனாவிடம் மக்காவ் வந்த பின் சீன அரசு மக்காவில் கவனம் செலுத்தி சுற்றுலாவளத்தை அதிகப்படுத்தியது. ஒரு குட்டி ஊராக இருந்தாலும் சீன அரசின் செயல்திட்டத்தினால் ஹாங்காங்கிற்கு அடுத்த இடத்தில் இது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு கோடியை தாண்டிவிட்டது.