யிரிஹாம் ரெயிமின் வழிகாட்டலுடன், எமது செய்தியாளர் Sha Che மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற தேனீரகத்திற்குச் சென்றார். அங்கு, இனிமையான முகாமு இசையும், உரத்த பாடல் ஒலியும் மக்களை மனமுருகச் செய்கின்றன. ஐந்து மூத்த கலைஞர்கள் தனித்தனியாக Ghijak, கை முரசு, Tanbur, Rubab, Yangqin ஆகிய இசைக் கருவியைக் கொண்டு இசைத்தனர். அதே வேளையில், இந்த இசைக் கருவிகளின் இனிமையான முகாமு இசையுடன், இந்த ஐந்து கலைஞர்கள் அரை வட்டமாக சுற்றி அமர்ந்து மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடினர்.
கை முரசு இசைத்த முதியவர், அபுதுசெரேடி என்பவர். அவருக்கு வயது 70. அவர் 12 முகாமு கலையின் தேசிய நிலை வாரிசு ஆவார். அவர் இத்தேனீரகத்தின் உரிமையாளருமாவார். அவர் திறமையாக கை முரசு இசைத்துக்கொண்டிருந்தார். பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, இந்த தேனீரகத்தில் முகாமு கலையைப் பரவல் செய்வது அவரது விருப்பமாகும். வயதாகி இருந்தாலும், அவர் இன்னமும் 20 மாணவர்களுக்கு இக்கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார். அவரது மாணவர்களில், 8 வயதான குழந்தையும், 80 வயதான முதியோரும் இருக்கின்றனர். அபுதுசெரேடி கூறியதாவது:
"முகாமு எனது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசு ஆண்டுக்கு பத்தாயிரம் யுவான் நிதியுதவி எனக்கு வழங்குகின்றது. தவிர, இம்மாவட்டத்தின் தொடர்புடைய வாரியம் ஆண்டுக்கு எனக்கு ஐந்து ஆயிரம் யுவான் உதவித்தொகையை வழங்குகிறது. என் தேனீரகத்தில், மக்கள் இலவசமாக முகாமு கலையைக் கண்டு இரசிக்கலாம். இக்கலையைப் பரவல் செய்வது, எனது கடமையாகும். என் வீட்டின் நிலப்பரப்பு சிறியது. இந்த தேனீரகம் அகலமாக இருக்கிறது. இங்கே வந்து இக்கலையைக் கற்றுக்கொள்ளும் மக்கள் அதிகம்" என்றார் அவர்.