மெஹ்முடியின் தாய் அகாஹன் செமெடி அம்மையாருக்கு வயது 61. அவர் ஹாமி நகரில் புகழ் பெற்ற பூத்தையல் கலைஞராக விளங்குகின்றார். மெஹ்முடியின் கூட்டு நிறுவனம், அவரது தாயின் பெயரிடப்பட்டது.
உய்கூர் இன ஆடைகளின் அழகு பற்றி அகாஹன் செமெடி அம்மையார் பெருமையுடன் குறிப்பிட்டார். உய்கூர் இனம், வண்ணத்தை நேசிக்கும் இனமாகும் என்றும், எங்கள் பணிகள், எங்கள் இனத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அகாஹன் செமெடி அம்மையார் உய்கூர் இன தொப்பி தயாரிப்பில் கைதேர்ந்தவர். 6 நாட்கள் நேரத்தில் அவர் ஒரு தொப்பியைப் பூத்தையல் செய்து, தயாரிக்க முடியும். 2008ஆம் ஆண்டு ஹாமி நகரின் முகாமு கலை மையம் நிறுவப்பட்டதைக் கொண்டாடும் வகையில், அகாஹன் செமெடி அம்மையார் 6 திங்கள் காலத்தில், 6 மீட்டர் சுற்றளவும், 1.1 மீட்டர் உயரமும் கொண்ட பெரிய ரக தொப்பி ஒன்றைத் தயாரித்து முடித்தார். தற்போது, இப்பெரிய தொப்பி, அவரது வீட்டில் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக விளங்குகிறது. பார்வையாளர்கள் இத்தொப்பியுடன் நிழற்படம் எடுக்கின்றனர்.