மதிப்புக்குரிய விந்தினர்களே!நேயர்களே!நண்பர்களே!
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று நாம் ஒன்று கூடி அதன் பொன் விழாவைக் கொண்டாடுகின்றோம். இத்தருணத்தில் சீனத் தமிழ் ஒலிபரப்பைத் தொடக்கிவைத்த பணியாளர்களில் ஒருவரான நான் மனமுவந்து, பெரிதும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். என் மனதில் இனிய நினைவுகள் அலை அலையாக எழுகின்றன.
அன்றைய இளைஞர்களாக இருந்த நாங்கள், இன்று முடி நரைத்த முதியோராக மாறியிருக்கிறோம். உலக ஒலிபரப்புத் துறையிலும் தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகம், தனி ஒலிபரப்புக் காலத்திலிருந்து காணொளிக் காட்சிகளுடன் கூடிய நவீன பல்லூடகக் காலத்தில் அடிஎழுத்து வைத்துள்ளது.
2000ஆம் ஆண்டு இறுதியில், அடியேன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது, தமிழ்ப் பிரிவின் இணையதளம் இன்னும் திறந்து வைக்கப்படவில்லை. இன்றோ, சீன வானொலியின் தமிழ் மொழி இணையதளம் இயங்கி, 10 ஆண்டு காலம் கடந்து விட்டது.
ஆகவே, இன்றைய கருதரங்கில், நம்முடைய தமிழ் ஒலிபரப்பின் தொடக்கக் காலப் பணி பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் சற்றுக் கூற விரும்புகிறேன்.
சீன வானொலி தமிழ் ஒலிபரப்புக்கான முன்னேற்பாட்டுப் பணி 1963, பிப்ரவரி திங்களில் துவங்கியது. அப்போது, பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் 8 பேர், முதலில் இந்த முன்னேற்பாட்டுப் பணியில் ஈடுபடத் தொடங்கினோம்.
இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்தவர்களில், எனது சகமாணவர்களான சென் ருய்சியாங், சாங் சியூலியெ தம்பதிகளும் இந்த எட்டு பேரில் அடங்குவர். முன்னேற்பாட்டுப் பணிக்கு அரும் சேவை செய்த அவர்களை உளமார வரவேற்கிறோம்.
முன்னேற்பாட்டுப் பணி, அப்போதைய ஆசிய துறையின் தலைவரான சாங் ஜிமிங், தமிழ்ப் பிரிவின் முதலாநது தலைவர் லி லிஜுன் அம்மையார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. தோழியர் ஃபா ஃபூகுவாங் அம்மையார், அன்றாட வேலைக்குப் பொறுப்பேற்றார்.