சோ என்லாய்

சோ என்லாய், 1949 முதல் 1958 வரை சீன வெளிநாட்டமைச்சராகப் பணியாற்றினார்.
சோ என்லாய், மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதியும் அரசியல்வாதியும் ராணுவ நிபுணரும் தூதாண்மை வல்லுநரும் ஆவார்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். சீன மக்கள் விடுதலை படையை நிறுவியவர்களில் ஒருவர் ஆவார். செச்சியாங் மாநிலத்தின் சௌசிங்கைச் சேர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு மார்ச் 5ந் நாள் சியாங்சு மாநிலத்தின் ஹுவெய்ஆனில் பிறந்தார். 1976ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் பெய்ஜிங்கில் இயற்கை எய்தினார்.
சீனாவின் பல முக்கிய தூதாண்மைக் கொள்கைகளை வகுப்பதில் அவர் பங்குகொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தினார். 1954ல் ஜெனிவா மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இந்தோசீனா பிரச்சினை தீர்க்கப்பட்டதால், வியட்நாம் (அதன் தென் பகுதி தவிர), லாவோஸ், கம்போடியா ஆகிய 3 நாடுகளின் சுதந்திரம் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீனாவின் சார்பில், சமாதான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளை, நாடுகளுக்கிடையிலான உறவைக் கையாளும் கோட்பாடாகக் கொள்ளுமாறு அவர் முன்மொழிந்தார். 1955ஆம் ஆண்டு 29 ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் இந்தோனேசியாவில் நடத்திய பாண்டுங் மாநாட்டில், சமாதான சகவாழ்வை ஆதரிப்பது, காலனிச ஆதிக்கத்தை எதிர்ப்பது, ஒத்த கருத்தை நாடி, கருத்து வேற்றுமையை ஒதுக்கி வைப்பது, கலந்தாலோசித்து கருத்து ஒற்றுமைக்கு வருவது ஆகிய கருத்துக்களை அவர் முன்வைத்தார். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பல நாடுகளில் அவர் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் நட்பார்ந்த பிரமுகர்களையும் வரவேற்று அவர்களுடன் சந்தித்துரையாடினார். இது, சீன மக்களுக்கும் உலக மக்களுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9