ஆக, நறுமணப்பை பேரரசர்களின் ஆசையை உணர்த்தக்கூட பய்னபட்டிருக்கிறது. காலப்போக்கில் வெகுமக்களிடையிலும் பரவிய நறுமணப்பைகள், அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சிவப்பு மாளிகைக் கனவுகள் என்ற புதினத்தில், இளம்பெண்களும், ஆண்களும், அன்பின், காதலின் அடையாளமாகக்கூட நறுமணப்பைகளை பயன்படுத்தியமை கூறப்பட்டுள்ளது. நறுமணப்பையின் கதை என்ற யூ இசைநாடகப் படைப்பு ஒன்றில், பிரிந்திருந்த காதல் உள்ளங்களான கணவனும் மனைவியும், ஆண்டுகள் கணக்கில் ஒருவர் நிலையை மற்றவர் அறியாமல் வாடி, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக சந்தித்து, மீண்டும் ஒன்றிணைந்ததை கூறுகிறது. அவர்கள் மீண்டும் சந்திக்க, ஒருவரை ஒருவர் அறிய உதவியது ஒரு நறுமணப்பை. ஆக, நறுமணப்பையானது மக்களின் வாழ்க்கையில் அன்றாட பயன்பாட்டுப் பொருளாகவும், அலங்காரப் பொருளாகவும், அன்பளிப்புப் பொருளாகவும், அன்பின் அடையாளமாகவுமாக பயன்பட்டுள்ளது.