அப்படியான காலத்தில், எழுதுகோல்களை வைக்க உருளையாக, செவ்வகமாக பெட்டிகள், உருளைகள் உள்ளங்கையின் நீள அகலத்தில் இருந்தன. இது நேற்றைய என் காலத்திலும், முந்தைய நாள் என் தந்தையின் காலத்திலும் மட்டுமல்ல, அதற்கு முந்தைய நாள் தாத்தா, முந்தைய வாரம் எள்ளு கொள்ளு பாட்டன் பூட்டன் காலத்தில், தூரிகைகள் மட்டுமே கொண்டு, தாளில் மைகொண்டு தீட்டி எழுதிய நாட்களிலேயே எழுதும் கருவியை தாங்கும், வைக்கும் பெட்டிகள், உருளைகள் இருக்கத்தான் செய்தன. எழுத்துக்களே ஓவியமாய அமைந்த கையெழுத்துக்கலையின் பிறப்பிடமான சீனாவில் தூரிகை தாங்கிகள், எழுதுகோல் வைக்கும் உருளைகள் இருந்தன என்று சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. அதிலும், தொன்மையும், பண்பாட்டு நுணுக்கமும் கொண்ட கலையம்சமும் சேர்ந்துகொள்ளும்போது, அதன் மதிப்பும் உயர்கிறது. இன்றைக்கும், அருங்காட்சியங்களில் அழகாக காணக்கிடைக்கும் தூரிகை தாங்கிகளை நாம் பார்க்கமுடியும்.
அளவில் சிறியது, கலையம்சத்திலும் பாரம்பரியமான, வழமையான பகுப்பில் இடம்பெறாதவை என்றாலுமே கூட, இவற்றுக்கான மதிப்பு குறைந்துவிடவில்லை.