காலச்சக்கரம் உருண்டோடி, நறுமணப்பைகளின் பயன்பாடு முன்பு போல் இல்லாது போனாலுமே கூட, இன்றைக்கும் பலருக்கு பிடித்தமான ஒரு பொருளாகவே இருக்கிறது. வடிவங்கள் பலவாக மாறினாலும், சின்னதாக, மணம் வீசும் தன் குணம் மாறாத நறுமணப்பைகள், அழகிய கலையம்சங்கள் பொதிந்த நறுமணைப்பைகள், சில நோய்களை தடுக்கும் ஆற்றலும் கொண்டவையாக இருக்கின்றன. இன்றைக்கும், கிராமப்புறங்களில், காதலர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் அன்பளிப்பில் நறுமணப்பைகளும் இடம்பெறுகின்றன.
சீனப் பண்பாட்டில் குட்டிப்புதையல்களாக இருக்கும் பொடிக்குப்பிகளையும், சுருக்குப்பைகளையும் நாம் குறிப்பிட்டபோது, இன்னொன்றையும் சேர்த்துத்தான் அறிமுகப்படுத்தினோம். அது, தூரிகை வைக்கும் பெட்டி அல்லது உருளை. இன்றைக்கு வேண்டுமானால், பேனாக்களும், பென்சில்களுமாக எழுதும் கருவிகள் அதிகம் பயன்படாத நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விதவிதமான எழுதுகோல்களில் எண்ணங்கள் விளையாட, கவிதைகளும், கதைகளுமாக கற்பனைகள் மைகளில் பதிவான காலங்கள் பழங்கதையாகிவிடவில்லை.