இங்குள்ள டான்பி பாலம் மிகச் சிறப்பான வகையில் பேணப்பட்டது எனலாம். உண்மையில் அது பெரிய பாலம் அல்ல, ஒரு வகை பாதை மட்டுமே. இருப்பினும் தரையிலிருந்து 4 மீட்டர் உயரத்தில் அமைந்ததாலும், அதன் கீழே சுரங்கம் போன்ற வழி இருப்பதாலும் இது ஒரு பாலமாக அழைக்கப்பட்டது, கருதப்பட்டது. இந்த பாலத்தில் இடது, நடுப்பகுதி மற்றும் வலது பகுதி என மூன்று பகுதிகள் இருக்கின்றன. இதில் இடதுபுறம் பேரரசருக்கு மட்டுமே உரித்தானது, வலதுபுறம் அரண்மனை அதிகாரிகளுக்கானது, நடுவில் உள்ளது மனிதர்கள் பயன்படுத்த அல்ல, வானுல்க தேவர்கள், கடவுளர்கள் செல்லவேண்டும் என்பதால் அதை யாரும் பயன்படுத்துவதில்லையாம். இந்த பாலத்தின் வழியாகத்தான், இதில் மட்டுமேதான் பேரரசர் வானுலக கடவுளர்களிடம் நல்ல விளைச்சலுக்காக வேண்டுதல் செய்ய இறை மன்றாட்டக் கூடத்துக்கு செல்வாராம்.