மேகத்தில் ஏறி, கீழே புவியில் பார்த்த மன்னன் கோழிக்கொண்டை மலையடிவாரத்தில் ஓரிடத்தில் ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக்கொண்டிருந்ததைக் கண்டான். உடனே கீழே இறங்கி, அந்தப் பெண்ணை கடத்திக்கொண்டு தன்னோடு தன் அரண்மனைக்கு கூட்டிச்சென்று, தன் மகளுக்கு அப்பெண்ணை தாய்ப்பால் கொடுக்கச் சொல்லி கட்டளையிட்டான். அந்தப் பெண்ணும் வேறு வழியின்றி டிராகன் மன்னனின் மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கினாள்.
நாட்கள் உருண்டோடின. டிராகன் மாளிகையிலேயே தங்கி டிராகன் மன்னனின் மகளாக இளவரசி ஆன்போவை கவனித்துக்கொள்ளும் செவிலித்தாயாக மாறினாள் அந்த மானிடப்பெண். முதலில் தன் கணவனையும், தன் ஒரே குழந்தையாகிய மகனையும் பிரிந்த சோகத்தில் அழுதுகொண்டிருந்த அப்பெண், நாளடைவில், தான் வளர்த்த இளவரசி ஆன்போவின் மீது பாசம் ஏற்பட்டு அவளை தன் மகளாக கருதி, கண்ணின் இமைபோல் பாதுகாப்பாக வளர்க்கத்தொடங்கினாள். இளவரசி ஆன்போவும் அழகான பெண்ணாய் வளர்ந்தாள்.