இளைஞன் அழகாக, மிடுக்காக இருந்தான், அவன் வலது காதில் ஒரு மச்சம் இருந்தது. ஆக அவன் தங்கக்காளை என்றும் பெரியவர் அவன் தந்தையென்றும் புரிந்துகொண்ட இளைஞனிடம் யார் என்ன என்று விசாரித்தாள். பிறகு அவளை யாரென்று அவர்கள் கேட்க, தன் பெயர் ஆன்போ என்றும் தான் இங்கே உறவினர்களை தேடி வந்ததாகவும் ஆனால் அவர்கள் கிடைக்கவில்லையென்றும் கூறினாள். அந்தப் பெரியவர், நீ தேடி வந்த உறவினர்கள் கிடைக்கவில்லை, பரவாயில்லை கவலைப்படாதே. நீ எங்களை துச்சமாக, ஏளனமாக பார்க்காவிட்டால், என் மகனை திருமணம் செய்துகொள்வாயா என்று கேட்டார். தான் முன்பு தன்னை வளர்த்தவனுக்கு செய்த வாக்குறுதியும், தங்கக்காளையும் அழகும் மனதில் பதிந்திருக்க அவள் தலையசைத்து திருமணத்துக்கு ஒப்புதல் தெரிவித்தாள். ஆனால் தங்கக்காளையோ, தாங்கள் இருக்கும் நிலையைச் சொல்லி, எப்படி திருமணம் செய்யமுடியுமென கேட்க, இளவரசி ஆன்போ தன் சிகையில் இருந்த தங்கக் கொண்டை ஊசி ஒன்றைக் கொடுத்து, தந்தைக்கு மருந்தும், உணவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களும் வாங்கி வர தங்கக்காளையை அனுப்பினாள்.