இதைக்கேட்ட செவிலித்தாய், நீ என் மருமகளானால் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று கூறினாள். நாட்கள் உருண்டோட இளவரசி ஆன்போ அழகான இளம்பெண்ணாக வளர்ந்தாள். ஒருமுறை தன் அழகு மகளோடு மேற்கத்திய ராணியின் விருந்துக்கு சென்றான் டிராகன் மன்னன். இளவரசி ஆன்போ வாய்ப்பு கிடைக்கும்போது பூவுலகுக்குச் சென்று செவிலித்தாயின் குடும்பத்தை பார்த்துவர திட்டமிட்டாள். வானுலக மாளிகையில், விருந்தில் தன் தந்தை மதுவருந்தி களித்துக்கொண்டிருந்த நேரம் பார்த்து, மேகத்தில் ஏறி பூவுலகுக்குச் சென்று வர கிளம்பினாள் இளவரசி ஆன்போ. கீழே கோழிக்கொண்டை மலையின் வடக்கே கடற்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த இளவரசி ஆன்போ, கீழே கண்ட காட்சி கோரமாக இருந்தது. தாவரங்கள் வாடி, வதங்கி, காய்ந்து கிடக்க, நிலம் வறட்சியில் பிளந்து கிடக்க, மக்கள் பஞ்சத்தில் இருப்பதை அவள் கண்டாள். தன்னை வளர்த்தவளின் கணவன் மற்றும் தங்கக்காளையின் நிலைமை என்ன, தெரிந்துகொள்ள விரும்பினாள் இளவரசி ஆன்போ. சற்று தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது, வெளியே மீன்பிடி வலை தொங்கிக்கொண்டிருந்த அந்த குடிசையருகே இதுதான் தான் தேடிய வீடென்று நினைத்து இறங்கினாள் இளவரசி. அருகே சென்றபோது வீட்டுக்குள்ளிருந்து முனகல் சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்த இளவரசி அங்கே கொஞ்சம் வயதான ஒருவர் உடம்பில் காயங்களால் ஏற்பட்ட புண்களுடன் படுத்துக்கிடப்பதையும், அருகே இளைஞன் ஒருவன் அமர்ந்து அந்த பெரியவரை கவனித்துக்கொண்டிருந்ததையும் கண்டாள்.