பிறகு அவர்களுக்கு திருமணமும் நடந்தது. புதிய கணவனோடு நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உதவினாள் இளவரசி. யாருக்கு மீன் கிடைக்கிறதோ இல்லையோ, இவர்களுக்கு குறையின்றி மீன் கிடைத்தது. உணவுக்கு போக மீதியை விற்று தந்தைக்கு மருந்து வாங்கி கவனித்துக்கொண்டனர் இருவரும். ஒருநாள், இரவில் கணவனிடம் ஏன் இப்படி வறட்சி நிலவுகிறது என்று கேட்டாள் இளவரசி ஆன்போ. தங்கக்காளையும் மனைவியிடம், தான் சிறுவயதில் இருந்தபோது தன் தாயை டிராகன் மன்னன் கடத்திச்சென்றதையும், அதற்கு பிறகு கொஞ்சம் வளர்ந்தபின் தான் கோபத்தில் டிராகன் மன்னனின் கோயிலை இடித்துத் தகர்த்ததையும், இதையறிந்த டிராகன் மன்னன் தன்னை கொல்ல வர, தன் தந்தை குறுக்கே பாய்ந்து டிராகன் மன்னனின் கால்களின் இடுக்கிகள் கீறி காயமாக்க, இப்படி புண் பரவிய உடலாய் மாறியதையும், டிராகன் மன்னன் ஆத்திரத்தில் இனி இப்பகுதிக்கு மழையை பொழிவிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துச் சென்றதையும் சொல்லி, வறட்சிக்கு காரணத்தை விளக்கினான். மேலும் இதை யாருக்கு சொல்லக்கூடாது, சொன்னால் டிராகன் மன்னனுக்கு தெரிந்து அவன் மேலும் அழிவை ஏற்படுத்துவான் என்றான். இதைக்கேட்ட இளவரசி ஆன்போ, தான் யார் என்ற உண்மையைச் சொல்ல, கோபமும் வெறுப்பும், பழியுணர்ச்சியும் கொண்ட தங்கக்காளை கட்டியை மனைவியை இரவென்றும் பாராமல் வெளியே தள்ளி கதவை சாத்தினான். ஆன்போ கெஞ்சிக் கதறியும் அவன் மனம் மாறவில்லை.