அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24-வது கருத்தரங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, 2013-ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 17-ஆம் நாள், திருச்சி ஹோட்டல் அருண் சுமங்கலி மஹாலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கடந்த 23-வது கருத்தரங்கு பாண்டிச்சேரியில் நடந்து முடிந்து, ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும் கூட, அடுத்த 24-வது கருத்தரங்கை பொறுப்பேற்று நடத்த எந்த நேயர் மன்றமும் முன்வரவில்லை. அந்நிலையில், கருத்தரங்கு ஒவ்வோராண்டும் தவறாமல் நடைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கில், இக்கருத்தரங்கை பொறுப்பேற்று நடத்த, பாண்டிச்சேரி மாநில சீன வானொலி நேயர் மன்றம், திருச்சி மாவட்ட அண்ணா நகர் சீன வானொலி நேயர் மன்றம் மற்றும் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம் ஆகிய கூட்டாக முயற்சி மேற்கொண்டன. மீண்டும் பாண்டிச்சேரியில் நடத்துவதற்குப் பதிலாக, நேயர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும் வகையில், திருச்சியில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அம்முடிவினைத் தொடர்ந்து, கருத்தரங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை திரு.வி.டி.இரவிச்சந்திரன் மேற்கொண்டார். அவருக்கான உதவிகளை உடனின்று திரு.ஜி.சக்கரபாணி ஏற்பாடு செய்தார்.
கருத்தரங்கு நடைபெறுவதற்கு இரு வார காலத்திற்கு முன்பு, சீன வானொலியின் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலமாக, கருத்தரங்கு நடைபெறுவதற்கான தகவல் வெளியிடப்பட்டது. மூன்று வார காலத்திற்கு முன்னதாக, செல்லிடைப்பேசி வலைப்பின்னல் அமைப்பின் மூலம், கருத்தரங்கு நடைபெறும் தகவல் அனுப்பப்பட்டு, ஒருவருக்கொருவர், இத்தகவலை பரிமாறிக் கொள்ளுமாறு வேண்டுகோயொன்று முன்வைக்கப்பட்டது. கருத்தரங்கு நடைபெறுவதற்கான முதல் வாரம், வானொலி மூலமாகவும் அறிவிக்கப்பட்டது.
அந்நிலையில், இக்கருத்தரங்கில் 120 நேயர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பரிசுப் பொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் பொது அறிவுப் போட்டி ஒன்றின் பரிசுப் பொருள் விநியோகிக்கப்பட்டிருந்தாலோ, இன்னும் கூடுதலான நேயர்கள் வந்திருக்கக்கூடும். ஆயினும், சீன வானொலியின் மீது அக்கறை கொண்ட நேயர்களில் பெரும்பாலானோர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், திருச்சி மாவட்ட அண்ணா நகர் சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் திரு.வி.டி.இரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் திரு.எஸ்.செல்வம் தலைமையுரையாற்றினார். அதற்குப்பின், முன்னிலை வகித்த, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் பொருளாளர் திரு.எஸ்.எம்.இரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் திரு. பல்லவி கே.பரமசிவம் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கில் கலந்து கொண்ட நேயர்கள் அனைவரும் தமிழ்ப்பிரிவின் முன்னாள் சிறப்பு நிபுணர்களான திரு.கே.எஸ்.பாண்டியன் மற்றும் திரு.கிளிட்டஸ் ஆகியோரின் சிறப்புரையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில், சிறப்பு நிபுணர்கள் இருவரும், சீனா மற்றும் சீன வானொலியுடனான தமது இனிய அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். இவ்விருவரின் உரையும் இன்னும் சிறிது நேரம் தொடரக்கூடாதா என நேயர்களை எண்ண வைத்தது. அவ்விருவரின் சிறப்புரைகளுக்குப் பின், தஞ்சாவூர் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு. எம்.உலகநாதன் குழுவினர் வழங்கிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை பற்றி இவ்வில்லுப்பாட்டு விளக்கிக் கூறியது.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர், அதே விடுதியில், நேயர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு, பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கின. பொருனை பாலு அவர்கள், இனிய பாடல் ஒன்றைப் பாடி, பிற்பகல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதன்பின்னர், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பிய நேயர்கள் அவைருக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 20 நேயர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஒவ்வொரு கருத்தரங்கிற்கும் ரூ.1000-ஐ நன்கொடையாக அளித்து வரும் அரியலூர் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு.சு.கலைவாணன் ராதிகா அவர்கள், இக்கருத்தரங்கிலும் நன்கொடைத் தொகையை வழங்கினார்.
அண்மையில் காலமான நமது நேயர் நந்தியாலம் திரு. டி.தணிகாசலம் என்னும் நேயருக்காக இரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி நிறைவடையும் நேரத்தில், அனைனத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு.எஸ்.செல்வம் அவர்கள் முன்மொழிவு ஒன்றை வழங்கினார். பொதுவாக, ஆண்டுதோறும் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. தம் சொந்த செலவில் இக்கருத்தரங்கை நடத்த வேண்டியுள்ளதால், பண வசதி படைத்த நேயர்கள் அல்லது நேயர் மன்றங்களிலாயே கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இதுவரை கருத்தரங்கு நடத்தப்படவில்லை. மேலும், தென்மாவட்டத் தலைநகர் பலவற்றில் இன்னும் கருத்தரங்குகள் நடத்தப்படவில்லை. எனவே, சுமார் 15 அல்லது 20 நேயர்கள் தலா ரூ.1000 நன்கொடையாக வழங்கினால், அத்தொகையைக் கொண்டு, இதுவரை கருத்தரங்கு நடைபெறாத இடங்களில் கருத்தரங்கை நடத்தலாம் என திரு.எஸ்.செல்வம் முன்மொழிந்தார். இதனை ஏற்றுக் கொண்டு, முதல் நன்கொடையாளராக கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு.கவி.செங்குட்டுவன் அவர்கள் ரூ.1000- நன்கொடையாக வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், புதுவை மாநில சீன வானொலி நேயர் மன்றச் செயலாளர் திரு.ஜி.இராஜகோபால், கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24-வது கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இக்கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்திய திருச்சி மாவட்ட அண்ணா நகர் சீன வானொலி நேயர் மன்றம், புதுவை மாநில சீன வானொலி நேயர் மன்றம் மற்றும் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம் ஆகியவற்றின் பொருப்பாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற எமது முன்னாள் பணியாளர்கள் திரு. கிளிட்டஸ் மற்றும் திரு.பாண்டியன் ஆகியோருக்கும், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்.
அன்புடன்,
எஸ்.செல்வம்