குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை, லியு சியு ஃபெங்கின் வாழ்க்கையில் ஹுவார் முக்கிய இடம் வகிக்கிறது. லியு சியு ஃபெங் கூறியதாவது:
"13 வயதில், ஆடுகளை மேய்க்கும் போது, ஹுவார் பாடத் துவங்கினேன். அப்போது எனது குடும்பம் வறுமையாக இருந்தது. நான் மற்றவருக்காக ஆடுகளை மேய்த்து வந்தேன். என்னுடன் இணைந்து ஆடுகளை மேய்க்கும் முதியோரிடமிருந்து ஹுவார் பாடக் கற்றுக்கொண்டேன்" என்றார் அவர்.
லியு சியு ஃபெங் பாடுகின்ற லியு பெங் மலை ஹுவார், ஹுவார் பாடல் வகைகளில் ஒன்றாகும். லியு பெங் மலை ஹுவார், லியு பெங் மலையிலும், அதைச் சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழும் மக்களின் ஆன்மீக தாயகம் என அழைக்கப்படுகிறது. உள்ளூர் பிரதேசத்தின் நாட்டுப்புறப் பாடல்கள், இஸ்லாமிய திருமறை ஓதும் தொனி ஆகியவற்றின் செல்வாக்குடன், லியு பெங் மலை ஹுவார் தனிச்சிறப்பு வாய்ந்தது. துள்ளல் தாளத்துடனும், இனிமையான இன்னிசையுடனும் லியு பெங் மலை ஹுவார் மக்களிடையில் தலைமுறை தலைமுறையாக பரவி வந்துள்ளது. லியு பெங் மலைப் பிரதேசத்தின் வயல்களிலும், சந்தைக்கும், நகருக்கும் செல்லும் சாலைகளிலும், மாடுகளையும் ஆடுகளையும் மேய்க்கும்போது, புல் வெட்டும்போது, உணவு தயாரிக்கும் போது, மக்கள் சுய விருப்பப்படி உடனடியாக ஹுவார் பாடுகின்றனர். இந்த உயிர்த்துடிப்பான ஹுவார், உள்ளூர் மக்களின் வாய்வழி பரவி வரும் வாழ்க்கையின் பதிவாகும்.