லியு சியு ஃபெங்கிற்கு கவலை தரும் நிலைமை படிப்படியாக குறைந்து விட்டது. நிங் சியா பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சின் ட்சொங் வெய்யின் அறிமுகத்தின்படி, நிங் சியா தன்னாட்சிப் பிரதேசத்தில் பத்தாண்டுகளாக சீன மேற்குப் பகுதி நாட்டுப்புறப் பாடல் விழா நடைபெற்று வந்துள்ளது. தவிரவும், 14 ஹுவார் சிறப்பு பரவல் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு, நிங் சியா தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்வி மற்றும் பண்பாட்டு வாரியங்கள் ஹுவார் பாட்டுக் கல்வியை சோதனை முறையில் பள்ளிகளி்ல் பரவல் செய்யத் துவங்கின. அவை ஹுவார் பாடநூல்களை வினியோகித்து, ஹுவார் இசை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தன. நிங் சியா தன்னாட்சிப் பிரதேசத்தின் பண்பாடு மற்றும் கல்வி வாரியங்களின் தூண்டுதலுடன், நிங் சியாவின் பல்வேறு இடங்களில் ஹுவார் புத்துயிர் பெற்றுள்ளது. நிங் சியா பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் Xin Zong Wei கூறியதாவது:
"ஹுவார் தேசிய பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு, அதனை பரப்புகின்ற தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு புறம் கிராமப்புறங்களில், கலைஞர்களை மையமாகக் கொண்டு, பொது மக்களிடையே ஹுவார் பரவல் செய்து வருகின்றோம். மறுபுறம், கலைஞர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு ஹுவார் பாடல் ஒழுங்குகள் மற்றும் தனிச்சிறப்புகளைக் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். பிறகு, அந்த ஆசிரியர்களே அவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பர். கடந்த சில ஆண்டுகளில், சுமார் பத்தாயிரம் பேர் கிராமப்புறங்களில் அல்லது பள்ளிகளில் ஹுவார் கல்வியைப் பெற்றுள்ளனர்" என்றார் அவர்.