19ஆம் நாள் முதல் சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் துவக்கினார். சீன-இந்திய நட்பு பரிமாற்றம் நீண்ட வரலாறுடையது. புதிய நூற்றாண்டில், இரு நாட்டுத் தலைவர்களும் நடைமுறைக்கு ஏற்ற மனப்பாங்கு மற்றும் நெடுநோக்கு பார்வையுடன் இரு தரப்பு ஒத்துழைப்பை விரிவாக்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்புறவு நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருகின்றது.
இந்தியாவுடனான உறவில் சீனாவின் புதிய தலைவர்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். உலகில் சீனாவும் இந்தியாவும் இரண்டு பெரிய வளரும் நாடுகளாகும். பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை மேம்பாடு முதலிய முக்கிய கடமைகளை இரு நாடுகளும் எதிர்நோக்குகின்றன. பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பும் போட்டியும் நிலவுகின்றன. ஆனால், ஒத்துழைப்பு மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, சீன-இந்திய வர்த்தகத் தொகை சுமார் 20 மடங்காக அதிகரித்தது. 2012ஆம் ஆண்டு இரு நாட்டு வர்த்தகத் தொகை 6650 கோடி அமெரிக்க டாலராகும். சீனா இந்தியாவின் 2வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், தெற்காசியாவில் இந்தியா சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் மாறியுள்ளன.
மேலும், சர்வதேச அலுவல்களில் இரு நாட்டு ஒத்துழைப்பு வலுவாகி வருகிறது. ஐ.நா, 20 நாடுகள் குழு, பிரிக்ஸ் நாடுகள் முதலிய அமைப்புமுறையில் சீனாவும் இந்தியாவும் ஒத்துழைத்து, பன்னாட்டு நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், எரியாற்றல் பயங்கரவாத எதிர்ப்பு, உணவு பாதுகாப்பு முதலிய உலகளவிலான அறைகூவல்களைச் சமாளித்து, வளரும் நாடுகளின் பொது நலன்களைக் கூட்டாகப் பேணிக்காக்கின்றன. இரு நாடுகளையும் பொருத்த வரை, நாட்டின் வளர்ச்சி இலக்கை நனவாக்க, அமைதியான சூழ்நிலை தேவைப்படுகின்றது.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் எல்லைப் பிரச்சினை நிலவுகின்றது. இருந்த போதிலும், சுமூகமாக பழகுவதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்கள் முழுமையாக அறிந்து கொண்டுள்ளனர். இப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்புகளும் நட்பு கலந்தாய்வை நடத்தி வருகின்றன. பக்குவம் அடைந்த பெரிய நாடுகளுக்கிடை உறவை இது வெளிப்படுத்தியுள்ளது. தற்போது சர்வதேச நிலைமையில் அதிக மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆசியாவின் வளர்ச்சி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு அவை முக்கிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன. தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கின் இந்தியப் பயணம் இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை மேலும் வலுப்படுத்தி, ஆசியா மற்றும் உலகின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் மாபெரும் ஆற்றலை வழங்க வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.