சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் 20ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். தலைமை அமைச்சராகப் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இந்தியா சீனாவின் முக்கிய அண்டை நாடு என்பதாகும் என்று லி கெச்சியாங் கூறினார்.
பண்டைக்காலம் தொட்டு சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகால பரிமாற்ற வரலாறுடையது. எதிர்காலம் நோக்கி, இரு நாடுகள் கூட்டாக வளர்வதற்கு மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று அவர் குறிப்பிட்டார். தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்குடன் திறந்த மனத்துடன் நட்பார்ந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக லீ கெச்சியாங் கூறினார்.
இரு தரப்புகளும் உருவாக்கிய கூட்டறிக்கையில், பல துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வதென உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் நெடுநோக்கு கருத்துற்றுமையையும் நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்று இரு தரப்புகளும் தெரிவித்தன. இரு நாடுகளின் வளர்ச்சியை தத்தமது முக்கிய வாய்ப்பாக கருத வேண்டும் என்றும் சீனாவும் இந்தியாவும் அமைதியாகப் பழகுவது ஆசிய ஒத்துழைப்பின் புதிய மாதிரியாக மாற வேண்டும் என்றும், இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சி உலகப் பொருளாதார வளர்ச்சியில் புதிய இயக்கு ஆற்றலாக மாற வேண்டும் என்றும் இரு தரப்புகளும் ஒருமனதாக கருதுவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.
கருத்துவேற்றுமைகளை விட சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான பொது நலன்கள் மேலும் அதிகமானவை. வரலாற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, திறந்த மனத்துடன் பிரச்சினையைத் தீர்த்து, கருத்துவேற்றுமையைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். சீனாவும் இந்தியாவும் ஒத்துழைப்பை ஆழமாக்கி கூட்டாக வளர்வது ஆசியாவின் அதிர்ஷடமாகவும், முழு உலகின் இன்பமாகும் இருக்கிறது. தற்போது இரு நாட்டுறவு முன்னென்றும் கண்டிராத வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்குகிறது.
இந்தப் பயணத்தில் உருவாக்கிய ஒத்தக் கருத்துக்களைப் போதியளவில் பயன்படுத்தி, சீன-இந்திய உறவில் புதிய அத்தியாயம் திறந்து வைக்க இரு தரப்பும் முயற்சி செய்ய வேண்டும் என்று லீ கெச்சியாங் குறிப்பிட்டார்.
மென்மோகன் சிங் பேசுகையில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் தொடர்பு மேற்கொள்வது, இந்திய-சீன உறவில் எப்பொழுதும் முக்கியமானது. பஞ்ச சீல கோட்பாடுகள், இரு நாட்டுறவின் அடிப்படையாகும். தொடர்பு அதிகரிப்பு, ஒத்துழைப்பு விரிவாக்கம், புரிந்துணர்வு ஆழமாக்குதல் ஆகியவை, தற்போதைய இரு நாட்டுறவின் தனிச்சிறப்பியல்புகளாகும். இரு நாடுகளிடை வேறுப்பாடுகள், இருதரப்புறவில் தடையாக அல்ல. இரு நாடுகளிடையிலுள்ள அனைத்து பிரச்சினைகளும் சீராக தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.