சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 23ஆம் நாள் முற்பகல் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் சொற்பொழிவு ஆற்றினார். சீன-பாகிஸ்தான் உறவு வளர்வதன் அரிய அனுபவங்களை அவர் தொகுத்து, எதிர்காலத்தில் இரு நாட்டு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகளையும் அவர் முன்மொழிந்தார்.
சீனாவும் பாகிஸ்தானும் தூதாண்மை உறவை நிறுவிய கடந்த 62 ஆண்டுகளில் இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகின்றது. இந்த ஆண்டுகளில் சர்வதேச நிலைமையின் மாற்றங்கள், உள்நாட்டு அரசியல் துறையின் மாற்றங்கள் ஆகியவற்றின் பாதிப்பைப் பொருட்படுத்தாமல், சீன-பாகிஸ்தான் நட்புறவு எப்போதும் சீராக முன்னேறி வருகின்றது. அவர் கூறியதாவது
சீன-பாகிஸ்தான் உறவு மிகவும் கடினமான சூழ்நிலையில் நிறுவப்பட்டு வளர்ந்து வருகிறது. இரு நாடுகளும் நேர்மையாக சகோதர பாசத்தோடு பழகி வருகின்றன. சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பாகிஸ்தான் எப்போதும் தயக்கமின்றி சீனாவுக்கு மதிப்புமிக்க ஆதரவு வழங்கி வருகிறது. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை பாகிஸ்தான் முன்னேற்றும் முக்கிய தருணத்திலும், பிரதேசப் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் முக்கிய தருணத்திலும் சீன அரசும் மக்களும் பாகிஸ்தானுடன் உறுதியாக சேர்ந்து இருக்கின்றோம் என்று அவர் கூறினார்.
லீ கெச்சியாங்கின் உரை பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. சொற்பொழிவின் போது அவர்கள் 12 முறை மேசையை தட்டி ஆதரவு தெரித்தது குறிப்பிடத்தக்கது.
ஆழமான பாரம்பரிய நட்புறவு இரு நாட்டுறவை வளர்ப்பதற்கு உறுதியான அடிப்படையை இட்டுள்ளது. பன்னாட்டு நிலைமை மாற்றம் மற்றும் ஆசியா எதிர்நோக்கும் அறைகூவல்களைச் சமாளிக்க, சீனாவும் பாகிஸ்தானும் மேலும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்று லீ கெச்சியாங் கூறினார். அவர் கூறியதாவது
சீன-பாகிஸ்தான் பன்முக ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு உயர் நிலை பரிமாற்றத்தை மேலும் நெருக்கமாக்க வேண்டும். அடிப்படை வசதிகளின் கட்டுமானம், கடற்வளம், எரியாற்றல், வேளாண்மை, பாதுகாப்பு முதலிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை முழுமூச்சுடன் முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானுக்காக சீனா ஆயிரம் சீன மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து, பாகிஸ்தானில் மேலும் அதிகமான கன்பிஃயூசியஸ் கழகங்களை நிறுவுமென லீ கெச்சியாங் அறிவித்தார். மேலும், பிரதேசம் மற்றும் பன்னாட்டு அலுவல்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேலும் வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.