4வது சீன-தெற்காசியப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு வட்ட மேசை மாநாடு ஜூன் 3ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் செங்தூ நகரில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான், வங்காளத்தேசம், இந்தியா, மாலத் தீவு, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் முதலிய 7 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த எரியாற்றல் துறை அமைச்சர்கள், வணிகச் சங்கங்களின் பொறுப்பாளர்கள், நீர் மின் உற்பத்தி நிபுணர்கள், சிச்சுவான் மாநில மற்றும் தெற்காசியாவின் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக 2010ஆம் ஆண்டு முதல், இக்கூட்டம் 3 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, சிச்சுவான் மாநிலம் தெற்காசிய நாடுகளுடன் பல பரிமாற்றங்கள் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள், சிச்சுவான் மாநிலத்தில் துணைத் தூதரகங்களை உருவாக்கியுள்ளன. அத்துடன், செங்தூ நகரிலிருந்து பெங்களூரு, மும்பை, கராச்சி, டாக்கா, காட்மண்ட் முதலிய இடங்களுக்கு நேரடியாகச் செல்லும் விமானப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. வணிகச் சங்கங்கள், பன்முக ஒத்துழைப்பு முறையை உருவாக்கியுள்ளது.
எரியாற்றல் குறைவாக உள்ள தெற்காசியாவுக்கு, எரியாற்றல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முக்கியமாக இருக்கிறது என்று தெற்காசியப் பிரதேச ஒத்துழைப்பு ஒன்றிய தொழில் மற்றும் வணிக சங்கத்தின் முன்னாள் தலைவர் தாரிக் சையீத் தெரிவித்தார்.