• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு வீடு, ஒரு வானொலி, ஒரு உலகம்
  2013-06-17 20:55:29  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மனிதனை வானொலி எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்கு உதாரணம் நான். பெரியாத்துக் கள்ளிவலசு ஒன்றும் புகழ்பெற்ற கிராமம் அல்ல, ஆனாலும் அங்கு புகழ்பெறத் துடிக்கும் இளைஞர்கள் பலர் இருந்தனர் எனலாம்.

அவர்களின் பொழுது போக்கு, மற்ற ஊர்களில் இருப்பவர்களைப் போன்று மாலை ஆனால் வெரும் அரட்டை அடிப்பதில் மட்டும் இருந்ததில்லை. இளவட்டங்களுக்கே உரித்தான காதல், வீரம் என அனைத்தும் அங்குள்ள இளைஞர்களுக்கும் உண்டு. ஆனாலும் அவர்கள் தனித்துவமாக விளங்க எண்ணினர்.

மற்ற ஊர்களில் உள்ள இளைஞர்கள் கள்ளிவலசு இளசுகள் மேல் ஒரு வித பொறாமைக் கொண்டுருந்தனர் எனலாம். காரணம், அரசியல், சமூகம், பொது அறிவு, உலக விடயங்கள் என அனைத்திலும் இவர்கள் ஒரு படி மேலேயே இருந்தனர் எனலாம். அதற்கான காரணத்தினை அறிந்துகொள்வதில் மற்ற ஊர் பெருசுகளுக்கு ஒரு ஆவல்.

பெரியாத்துக் கள்ளிவலசில் உள்ள இளைஞர்களுக்கு வானொலி கேட்கும் பழக்கம் வந்ததற்குக் காரணம் அவர்களின் தொழில். இந்த ஊரில் பெரும்பாலான குடும்பங்கள் நெசவுத்தொழில் செய்து வந்தனர். வானொலி மட்டுமே அவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொழிலினை செய்ய உறுதுணையாக இருந்தது எனலாம். வெறுமனே பாடல்களைக் கேட்டுக் கொண்டு இல்லாது அனைத்து விதமான நிகழ்சிகளையும் வானொலியில் கேட்க முடிந்தது. உள்ளூர் பண்பலை மட்டுமல்லாம், வெளிநாட்டு வானொலிகளையும் கேட்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது.

பெரியாத்துக் கள்ளிவலசுக்கு செல்ல வேண்டும் என்றால், இன்றும் இரண்டு கிலோ மீட்டர் பிரிவில் இருந்து நடந்தாக வேண்டும். பேருந்து வசதி ஒன்றும் சிறப்பாக இல்லை. எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் அருகில் உள்ள தாராபுரத்திற்கோ அல்லது கணியூருக்கோ செல்ல வேண்டும். ஊரின் ஒருபுரத்தில் கரைபுரண்டு ஓடும் அமராவதி. ஆற்றினை பற்றி கூறுகையில் எனக்கு சீனாவின் முதல் நூலான 'ஷிழ் சிங்' தான் நினைவுக்கு வருகிறது. அதில் வரும் அந்த முதல் பாடல் ஆற்றின் மத்தியில் உள்ள மணல் திட்டினை இப்படி வர்ணிக்கும்.

'குவான்!', 'குவான்!' – கூவும் பறவைகள்1

ஆற்றின் மத்தியில் மணல் திட்டினிலே.

அவளோ அடக்கமும் அழகும் அமைந்தவள்

அவனுக்குத் துணையாய் ஆகிடச் சிறந்தவள்.

- 'ஷிழ் சிங்'2, பாடல் எண்: 1

சீன வானொலியைக் கேட்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை, சீனாத் தொடர்பாக எந்த நூல் தமிழகத்தில் வெளிவந்தாலும், அதனை வாங்கத் தவருவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட நூலில் தான் மேற்கண்ட அருமையான கவிதை இடம் பெற்று இருந்தது.

'ஷிழ் சிங்' எனும் நூலில் இருந்து இந்தக் கவிதையை பயணி தமிழில் மொழிபெயர்துள்ளார். 'ஷிழ் சிங்' நூலினை அழகு தமிழில் 'கவித்தொகை' என்று கூறுகிறார் பயணி. "கவித்தொகையின் பாடல்களைப் படிக்காமல் இருத்தல் என்பது, எதையும் பார்க்காமல், சுவரின் பக்கம் திரும்பி நின்றுகொண்டிருப்பதைப் போன்றதல்லவா?" என்று கூறுகிறார் கன்பூஷியஸ்.

சீன இலக்கிய வரலாற்றின் முதல் நூல் இதுவென அறியும் போது, எப்படியெல்லாம் அன்றே சிந்தித்துள்ளனர் என்று வியப்பு மேலிடுகிறது. சீனாவின் அரசியல், கலை மற்றும் சமூக வாழ்வை நிர்ணயித்த நூல் என ஆறிந்து ஆனந்தமடைந்தேன். நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்களின் தொகுப்பாக அவ்வப்போது தமிழ் பிரிவும் ஒலிபரப்பியதை ஒப்பிட்டு பார்கிறேன்.

எங்கள் ஊரின் கிழக்கு பக்கத்தில் ஒரு அனைக்கட்டு. அனைக்கட்டு அருகில் ஒரு மண் மேடு. அந்த மேடுதான் அன்றைய விராடபுரம் என்று கூறுபவர்களும் உண்டு. மகாபாரதத்திற்கும் இந்த விராடபுரத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்ற ஒரு கதையும் உண்டு. அந்த மண் மேட்டில் சென்று கூட ஒரு சில நாட்களில் வானொலி கேட்டதுண்டு. அதற்கு காரணம், அங்கு எந்தவித இடையூரும் இல்லாமல் சிற்றலை வானொலிகளைக் கேட்க முடியும். இந்த காலம் போன்று அந்த காலத்தில் சீன வானொலி தெளிவாகக் கேட்காது. அந்த சமயங்களில் அந்த இரவு வேலையில் மண் மேட்டில் போய் வானொலி கேட்பது என்றுமே சுகமானதாகவே இருந்தது.

வீட்டில் உள்ள தாத்தாவும்…தாத்தா இறந்த பின் பாட்டியும் அந்த மண் மேடு பற்றி பல கதைகளைக் கூறியுள்ளனர். அந்த கதைகளில் தவறாமல் ஒரு ஜடாமுனி வரும். அது அந்த மண் மேட்டின் கீழே வசிப்பதாகவும். அங்குள்ள பனைமரங்களின் வேரினைப் பிடுங்கி தினமும் பல் தேய்ப்பதாகவும் கூறுவர். தாத்தாவிடம் நான் பல முறை ஒரே கேள்வியைக் கேட்டுள்ளேன். "எதற்காக அந்த ஜடா முனி அந்த மண் மேட்டில் வந்து தங்கியுள்ளது?" என்று. உலகில் எவ்வளவோ நல்ல நல்ல இடங்கள் இருக்க, அது ஏன் எங்கள் ஊர் எல்லையில் வந்து தங்க வேண்டும். சீனாவில் எவ்வளவு அழகான இடங்கள் உள்ளன, அங்கெல்லாம் சென்று இந்த ஜடாமுடி தங்கினால் என்ன என்று நினைத்தது உண்டு.

ஆனால், அதற்கு தாத்தா, "அந்த மண் மேட்டிற்கு அடியில் ஏழு கொப்பறைகளில் தங்கக் காசுகள் நிறைந்துள்ளன, அவற்றை தான் அந்த ஜடாமுனி பாதுகாத்து வருகிறது" என்றார். அதோடு நிற்கவில்லை தாத்தா. அதற்கு மேல் ஒரு பொடியையும் வைத்தார். அந்த தங்கக் காசுகளை எடுக்க எத்தனித்த பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு அதிகாரியை அங்கு அனுப்பி ஆய்வு நடத்தியதாம். அந்த அதிகாரியும் பல்வேறு உபகரணங்களைக் கொண்டுவந்து அந்த மண் மேட்டில் ஆய்வு செய்தாராம். ஒரு நாள் அதிகாலை அந்த வெள்ளையர், பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்று பார்பதற்காக ஒரு சிறப்பு வாய்ந்த கேமராவினை பூமியைத் துளையிட்டு வைத்தாராம்.

கேமராவை வைத்த ஐந்தாவது நிமிடத்தில், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என திரும்பிப் பார்காமல் ஓடிவிட்டாராம். பிறகு தான் புரிந்ததாம், அங்குள்ள ஜடாமுனி பனைமரங்களின் வேரினை பிடுங்கி பல் தேய்த்துக் கொண்டு இருந்தது. அன்று முதல் இந்த ஜடாமுனி கதை அந்த மண் மேட்டுடன் ஒட்டிக் கொண்டது.

இதேக் கதையை நான் பலமுறை தாத்தாவிடமும் பாட்டியிடமும் கேட்டுள்ளேன். ஒவ்வொறு முறைக் கேட்கும் போதும் அவர் அதே உற்சாகத்துடன் கூறுவார். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் புதிதாகவேத் தெரியும். பாட்டியும் தாத்தாவிற்கு சளைத்தவர் இல்லை. அவர் தனது வாயினைக் குவித்து சொல்லும் பாங்கு ஒரு சில சமயங்களில் எங்களைப் பயமுறுத்தியது உண்டு. இது போன்ற கதைகளை பிற்பாடு சீன வானொலியிலும் கடிகாசலம் ஐயா வாசிக்க கேட்டதுண்டு.

இப்பொழுதும் இருக்கிறதாம் அந்த தங்கக் காசு கொப்பறை. அதனை எடுக்க வேண்டும் எனில் அந்த மண் மேட்டிற்கு கீழே உள்ள அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டினை ஒரே மூச்சில் நிறுத்தாமல் யார் படிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த ஜடாமுனியே கொப்பறை தங்கக் காசுகளை எடுத்து வந்து கொடுக்குமாம்.

ஆனால் அதிலும் ஒரு சிரமம் இருக்கிறது, அப்படி படிக்க வருபவர்கள் அதனை முடிக்க முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டால், அவர்களை அந்த ஜடாமுனி விடாதாம். என்ன செய்யும் என்று நான் தாத்தவிடம் கேட்கவில்லை. எதற்கு வம்பு என்று அன்று இருந்துவிட்டேன். இன்று தாத்தாவும் இல்லை, அந்த ஜடாமுனியும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கல்வெட்டு மட்டும் இன்னும் அந்தக் பாழடைந்த கோவிலில் இருக்கிறது. அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது மீண்டும் அந்த இடத்திற்கு சென்று சீன வானொலியைக் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முடிந்தால் அந்த ஜடாமுனியையும் அருகில் அழைத்துக் கொண்டு கேட்க மனம் விரும்புகிறது. ஆனால் அந்த கல்வெட்டினை மட்டும் படிக்க மனம் வரவில்லை?!

சீன வானொலியை பலமுறை என்னோடு உடன் கேட்டவன் 'காம்' என்ற முருகேஷ். கே. முருகேஷ் எனதனை சுருக்கி 'காம்' வைத்துக் கொண்டான். இன்று திருப்பூரில் உள்ளான். சமீபகாலமாக வானொலிகளைக் கேட்பதில்லை. பின்னலாடைகளோடு பின்னிக்கொண்டு, அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்.

கடந்தவாரம் அவனோடு பேசியபோது, "எப்பொழுது ஊருக்கு வருகிறாய்" என்று கேட்டான். அவனிடம் சொன்னேன், "நாம் இருவரும் இணைந்து வானொலி கேட்டு எவ்வளவு நாள் ஆகிவிட்டது". விரைவில் வருகிறேன், "அந்த மண் மேட்டில் சென்று வானொலி கேட்கலாம்" என்று கூறினேன். அதற்கு அவன், "இன்னும் நீ திருந்தவே இல்லை" என்றான்.

"உனக்கு சேதி தெரியுமா" என்று பீடிகை போட்டான். அவன் பீடிகை போட்டால், அதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கும். அன்றைய பீடிகையிலும் மர்மம் தொக்கி நின்றது. "என்ன சீக்கிரம் சொல்", என்றேன். "போன வாரம் ஆடு மேய்க்கச் சென்ற சொக்கலிங்கம் தாத்தா…" என்று நிறுத்தி ஒரு மிடக்கு தண்ணீர் குடித்தான். எனக்கு பொருக்கமுடியவில்லை, "சீக்கிரம் சொல்லித் தொலையேண்டா!" என்றேன்.

"மண் மேட்டில் ஆடு மேய்துக் கொண்டு இருந்தபோது அவரது கண்களுக்கு நிலத்தில் ஏதோ மின்னுவது போல் பட்டதாம். அதனை எடுத்து பார்த்தபோது தான் தெரிந்ததாம், அது அந்த கொப்பறையில் இருந்து வெளியே வந்த தங்கக் காசு என்று. காசினை எடுத்தத் தாத்தா அது பற்றி ஊரில் யாரிடமும் சொல்லவில்லையாம்". "அப்புறம்" என்றேன் நான். "அட இதை வீட்டில் உள்ள பாட்டியிடம் கூடக் கூறவில்லையாம், அன்றிரவு பாட்டியின் கனவில் தாத்தா மண் மேட்டில் தங்கக் காசு கண்டெடுத்தனை அந்த ஜடாமுனி வந்து சொல்லியிருக்கிறது. பாட்டியும் நடு ஜாமம் என்றும் பார்காமல் தாத்தாவை எழுப்பி தங்கக் காசு… தங்கக் காசு" எனப் பிதறியுள்ளது.

"தாத்தாவுக்குத் தெரியாது பாட்டியின் கனவில் ஜடாமுனி வந்தது. தாத்தாவுக்கு ஒரு நொடியில் வேர்த்துவிட்டது. நடப்பது நனவா…கனவா…எனக் குழம்பி, தலையனை அடியில் இருந்த தங்கக் காசினை தொட்டுப் பார்த்துக்கொண்டார். பிறகு பாட்டியிடம், என்ன உளருகிறாய் என்று கேட்டது தான் தாமதம். பாட்டி தான் கண்ட கனவினைப் புட்டு புட்டு வைத்துளார். ஆக இதில் இருந்து என்ன தெரிகிறது." என்று பீடிகைப் போட்டான் முருகேஷ்.

"பீடிகையெல்லாம் வேண்டாம், விசயத்துக்கு வா…" என்றேன் நான். "இபொழுது அந்தத் தங்கக் காசு யாரிடம் உள்ளது" என்றேன். "அட நீ வேற, அந்த சேதியக் கேட்டா…நீ சொக்கலிங்கம் தாத்தாவ ஓட ஓட விரட்டி அடிப்ப" என்றான். "தாத்தா கண்டெடுத்தது தங்கக் காசு இல்லையாம். போன வாரம் அதே இடத்துல ஆடு மெச்சுட்டு இருந்த மாரி கழுத்துல போட்டிருந்த மாரியம்மன் டாலராம்" என்றான். பொசுக்கென்று போய்விட்டது எனக்கு.

ஒரு பக்கம் இந்த ஜடாமுனி மீண்டும் வந்துவிட்டதோ என்ற ஒரு பயம், மறு பக்கம் அடுத்த வாரம் எப்படி அந்தக் குன்றில் வானொலி கேட்பது. இந்த முருகேஷ் முதலிலேயே வரமாட்டான். இந்தக் கதைக்குபின் கண்டிப்பாக வரமாட்டான் என்று நானே நினைத்துக் கொண்டு அவனிடம் கேட்டேன், "சீன வானொலி அனுப்பியுள்ள இலவச வான் அஞ்சல் கடித உரைகளைக் கேட்டாயல்லவா… அதனைக் கொண்டு வருகிறேன், வந்து வாங்கிக் கொள்" என்றேன்.

"ஆனால் ஒரு நிபந்தனை" என்றேன் நான்.

"என்ன?"

"கடித உரை வேண்டுமென்றால்… மண் மேட்டிற்கு வர வேண்டும்"

"போடா… நீயும் அந்த கடித உரையும்…"

"அப்ப இந்த உரைய நான் என்னப் பன்றது"

"அத அந்த ஜடாமுனிக் கிட்டயேக் கொடுத்து, சீன வானொலிக்கு எழுதச் சொல்லு?!" இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவன் இணைப்பைத் துண்டித்ததும், எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அடப் போடா…சீன வானொலிய நான் தனி ஒரு ஆளாப் போய் அந்த மண் மேட்டில் அமர்ந்து கேட்கப் போறேன். அந்த ஜடாமுனிய இந்த டிராகன் ஒன்னும் செஞ்சுடாது. பார்ப்போம் ஒரு கை…ஜடாமுனியா… டிராகனா…என்று.

அப்படிப்பட்ட அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் தான் அருகில் உள்ள ஊர்களின் இளைஞர்களுக்கு சவால் விடுத்தனர். அருகில் உள்ள ஊர்களில் உள்ள ஒரு சில இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வந்தனர். தேர்வில் நம் அண்டை நாடுகள் பற்றி கேட்கப்படும் கேள்விகளைப் படித்துக் கொண்டு இருந்த நண்பர்களுக்கு, சீனாவினைப் பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. முதலில் அவர்கள் நாடுவது எங்களைத் தான். காரணம் நாங்கள் தொடர்ந்து சீன வானொலியில் ஒலிபரப்பாகும் செய்திகளைக் கேட்டு எங்களின் பொது அறிவினை வளர்த்துக் கொண்டோம்.

அவ்வப்போது வீட்டிற்கு பின்புறம் உள்ள சோளக் காட்டிலும் வானொலிப் பெட்டியை எடுத்துச் சென்று கேட்டதுண்டு. அப்படி கேட்ட நாட்களை மீண்டும் அசைப்போடப் போட… அடேங்கப்பா… இந்தக் 'ஷிழ் சிங்' கவிதைதான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது.

அந்தத் தினை செழித்திருக்கிறது

அந்தச் சோளம் முளைவிட்டிருக்கிறது

மெதுமெதுவே நீளும் நடை

அசைந்தாடி அலைப்பாயும் மனம்

என்னைத் தெரிந்தவர்கள்

என் மனம் வாடுகிறதோ என்பார்

என்னைத் தெரியாதவர்கள்

எதை நாடுகிறேனோ என்பார்

விரிநெடும் பெருவானமே!3

இது யாராலேயோ?

- 'ஷிழ் சிங்'4, பாடல் எண்: 65

சோளக் காடு எங்கள் ஊரில் இரண்டரக் கலந்த ஒன்று. அந்த காட்டிற்கு நடுவே உள்ள ஒரு வேப்ப மரத்தினை என்றைக்கும் மறக்க முடியாது. காரணம் எனக்கு பள்ளி விடுமுறை நாட்கள் எல்லாம், அந்த மரத்திற்கு அடியில்தான் கழிந்தது எனலாம். அந்த மரத்திற்கு கீழே அமர்ந்து எத்தனையெத்தனை கடிதங்களை சீன வானொலிக்கு 1990களில் எழுதியிருப்பேன்?!

Bo gui zhong wu pin shou hao5

மதிப்புள்ள பொருட்களைப்

பாதுகாப்பான இடத்தினில்

வைத்துக்கொள்ளுங்கள்.

சீன வானொலி எனக்கு அனுப்பிய ஒவ்வொரு பொருட்களும் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. செல்வம் அவர்களும், பல்லவி பரமசிவம் அவர்களும் அவைகளைப் பொன் போன்று பாதுகாத்து வருவதைப் பார்த்துள்ளேன். அதனினும் மேலாக பாதுகாப்பது என்பது என்னைப் போன்ற வாடகை வீட்டில் உள்ளோர்க்கு சிரமம். இருப்பினும் அவற்றை எடுத்து அவ்வப்போது பார்க்கும் போது, அவை ஒவ்வொன்றும் பெரிய கதைகளைக் கூறுகிறது. ஆனால் அவை அனைத்தினையும் எழுதத்தான் நேரம் இல்லை.

குறிப்புதவி நூல்கள்

1. 'குவான்!' – மூலத்தில் உள்ள ஒலிக்குறிப்பு. இந்த ஒலி, மூலத்தில் குறிப்பிடப்படும் ராஜாளி – Pandian Haliaetus - இணைகளுடன் சேரும்போது எழுப்பும் சிறப்பொலி.

2. பயணி, 2012. "குவான் எனக் கூவும் ராஜாளிகள்" வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை, ப.66-67. ISBN: 9789381969113. நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.

3. Tian என்ற சொல் வானைக் குறிக்கும். Cang என்பது ஆழ்பச்சை வண்ணத்தைக் குறிக்கும். எனவே, Cang Tian என்ற பதம், நீலவானைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆயினும் இது ஆங்கிலத்தில், ¬¬¬¬Heaven என்றே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. இன்றைக்கும் சீனப் பேசுவழக்கில், 'அடக்கடவுளே!' என்பதற்கி இணையாக இப்பதத்தினைப் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில், 'ஓ! தெய்வமே!' என்ற வேண்டுதலாகவும் இது பயன்படுகிறது. இந்தப் பாடலில் விரிவான நீண்டகன்ற என்னும் பொருள்தரும் அடைமொழியைத் தொடர்ந்து Cang Tian என்னும் பதம் பயின்றுவருகிறது. எனவே இந்த வரி, 'விரிநெடும் பெருவானமே!' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என இதன் ஆசிரியர் கூறுகிறார்.

4. பயணி, 2012. "தினைச் செழிப்பு", வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை, ப.82-83. ISBN: 9789381969113. நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.

5. கலையரசி, ஆண்டனி கிளீட்டஸ் சேவியர், 2009. "இடம் பெயர்தல்", அன்றாட சீன மொழி பாகம் – 04, ISBN: 9787507831115. பெய்ஜிங், ஹான்பன்/கன்பியூசியஸ் இன்ஸ்டிட்யூட், சீன வானொலி நிலையம்.

தங்க. ஜெய்சக்திவேல்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040