• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
என் உயிர் இருக்கும் வரை நினைவுகள்
  2013-06-17 20:58:33  cri எழுத்தின் அளவு:  A A A   
1) 1983-ஆம் வருடம் என் அண்ணன் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அவர்கள் எனக்கு ஒரு சிறிய கைத்துணி கொடுத்தார். அதில், வெள்ளை நிறத்தில் Radio Peking என்ற ஆங்கில எழுத்து சிவப்பு வண்ணத்தில் இருந்தது. அட, அழகாக இருக்கிறது, எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டபோது, நம் சீன வானொலி பற்றி கூறினார். அப்போது, சீன வானொலி பீகிங் வானொலி என்று இருந்தது. திங்கள்தோறும், வினா-விடைப்போட்டி நடைபெறுகிறது, அதில் நீயும் கலந்து கொள் என்று கூறி நிகழ்ச்சியைக் கேட்க வைத்து நேயர் எண் எப்படி பெறுவது என்று கூறினார். அப்போது நான் பெற்ற நேயர் எண். 058637. அதுமுதல் நிகழ்ச்சியைக் கேட்டு, நிகழ்ச்சியைப் பற்றி கருத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதன்முறையாக எனக்கு நம் சீன வானொலியில் இருந்து வந்த கடிதத்தை இன்று வரை பத்திரமாக வைத்திருக்கின்றேன்.

2) இராமபத்தின் அவர்கள், எஸ்.செல்வம் அவர்கள், பாண்டியராஜன் அவர்கள் மூவரும் ஒரு பூங்காவில் சந்தித்து பீகிங் வானொலி முன்னேற்றம் பற்றி பேசியதை மறக்க முடியாது. அப்போது நான் நம் சீன வானொலி நேயர் கிடையாது.

3) விழுப்புரம் ஒருமுறை சென்றபோது, எஸ்.சுந்தரம் அவர்கள் இப்போதுதான் வந்து சென்றார் என்று என் அண்ணன் கூறினார். நான் அதை கேட்டவுடன், வாழ்க்கையில் எதையோ பறிகொடுத்ததுபோல் நினைத்து எஸ்.சுந்தரம் அவர்களை காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று வருந்தியது என் மனதில் உள்ளது.

4) முதன்முறையாக 2000-ஆம் வருடம் ஆரம்பித்த கட்டுரைப் போட்டியில் நிறைய விடைத்தாள் எழுதி அனுப்பியதற்கு எனக்கு முதல் பரிசாக பட்டுத்துணி கிடைத்ததை பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்குப் பிறகு நடைபெற்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறிய வானொலிப் பெட்டி, சீனப் பெருஞ்சுவர் வரைந்த திரைச்சீலை, தலையணை உறை, கைக்கடிகாரம், கைவிளக்கு, குடை, பனியன், கைப்பை, நாள்குறிப்புப் புத்தகம் ஆகிய பொருட்களை பத்திரமாக வைத்திருக்கிறேன். முதன்முறையாக என்னை சிறந்த நேயராக தேர்வு செய்து நம் சீன வானொலியில் என் பெயரைக் கூறியதும், நான் அடைந்த சந்தோஷத்திற்கு ஈடுஇணை ஏதுமல்லை. சந்தோஷத்தில் குழந்தை மாதிரி கத்தியதை என்னால் மறக்க முடியாது. சீனப் பயணம் மேற்கொண்டதை போல் உணர்ந்தேன். எஸ்.சுந்தரம் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சீனத் தமிழொலி புத்தகத்தில் என் பெயர் இடம்பெற்ற புத்தகத்தை மட்டும் தனியாக வைத்திருக்கிறேன். ஒருமுறை நான் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டபோது எனக்கு பரிசு கிடைக்கவில்லை. பள்ளியில் படிக்கும்போது தேர்ச்சி பெறவில்லை என்றால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது. எஸ்.செல்வம் அவர்களிடமும், பாலக்குமார் அவர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்ச்சி பெறவில்லை என்று வருத்தம் அடைந்தது ஞாபத்திற்கு வந்தது.

5) என்னிடம் தொலைபேசி இல்லாத காலக்கட்டத்தில், கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி, நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, நான் விழுப்புரம் சென்றபோது, கலையரசி அவர்கள் என்னிடம் உரையாடியது, அவ்வப்போது நினைவில் வந்து செல்லும். பிறகு கலையரசி அவர்கள் சென்னை வந்து, பிறகு சீனாவுக்கு செல்லும்போது, நானும் என் கணவரும் மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று வழிஅனுப்பியது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது என்னால் மறக்க முடியாது.

6) இதுவரை நான் பெற்ற சான்றிதழ்களை (கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய சான்றிதழ், சிறந்தநேயர், தலைசிறந்த நேயர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு பற்றி பேசியதற்கு வழங்கிய சான்றிதழ்) என் கணவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். ஒரு வெளிநாட்டு வானொலியில் இருந்து கிடைத்திருக்கிறது என்று அதன் பெருமையைப் பற்றி கூறியது நினைவில் உள்ளது.

7) ஒருமுறை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, என் கணவர் ஏதோ கேட்க, நான் சீன வானொலி நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது என்னிடம் எதுவும் பேசாதீர்கள் என்று கோபமாக திட்டியதை என்னால் மறக்க முடியாது. பிறகு நான் வாங்கிய சான்றிதழ், பரிசுப் பொருட்களைப் பார்த்து எனக்கு மிகவும் உதவி செய்து வருகிறார். நான் நிகழ்ச்சியைக் கேட்டு கடிதம் எழுத தாள்களை வெட்டிக் கொடுத்து, நான் எழுதியதைப் படித்துப் பார்த்தபின்பு, தபால் நிலையம் எடுத்துச் செல்வார்.

8) ஒவ்வொரு கருத்தரங்கு நடைபெறும்போதும், எஸ்.செல்வம் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிளம்பிவிட்டீர்களா, பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறீர்களா, நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று பேசியதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன். 18.12.2011-ல், 23-வது கருத்தரங்கு பாண்டிச்சேரியில் நடைபெற்றபோது, நானும், என் கணவரும் முதன்முறையாக கலந்து கொண்டோம். அப்போது முனைவர் ந.கடிகாசலம் அவர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். இந்த கருத்தரங்கில் தேன்மொழி, ஜெயா, மோகன் அவர்களை நேரில் பார்த்து அறிமுகம் செய்து கொண்டதை என்னால் மறக்க முடியாது. தேன்மொழி அவர்களிடம் நிகழ்ச்சி பற்றி நான் எழுதி வைத்துள்ள குறிப்புப் புத்தகத்தை காண்பித்து மகிழ்ச்சி அடைந்தேன்.

9) ஒருமுறை கருத்தரங்கில் கலந்து கொள்ள வாணி அவர்கள் வந்திருந்தபோது, அவரிடம் தொலைபேசியில் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற வாழ்த்து கூறி பேசியதை என்னால் மறக்க முடியாது. நான் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். 2001-ஆம் வருடம், 2002-ஆம் வருடம் புகழ்பெற்ற பாரம்பரியம் மிக்க சீனப் பாடல்களின் ஒளி-ஒலி வடிவத்தை அவ்வப்போது போட்டு கேட்டு மகிழ்வேன்.

10) சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கி, 49-ஆம் ஆண்டு நிறைவு விழா பாண்டிச்சேரியில் இராஜகோபால் அவர்கள் வீட்டில் நடைபெற்றபோது, கிளிட்டஸ் அவர்களை சந்திக்கவே நானும், என் கணவரும் சென்றோம். நான் கலந்து கொண்ட முதல் நேயர் மன்றக் கூட்டம் இது. என் கணவரின் பெயர் த.சந்திரசேகரன். அவரும் ஒரு நேயர். கிளீட்டஸ் அவர்களிடம் எப்படி சீனக்கதையை கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் விளக்கமாக பதில் அளித்தார். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் அனுபவத்தை மறக்க முடியாது. கிளீட்டஸ் அவர்கள் என்னை பேட்டி கண்டார். இரண்டாவது முறையாக ஜெயா அவர்கள் என்னை நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்ததை என்னால் மறக்க முடியாது.

11) கடிதம் எழுதும்போது நான் ஒரே தாளில் கருத்துக் கடிதம் எழுதுவேன். எஸ்.செல்வம் அவர்கள் அப்படி எழுதக்கூடாது, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு கடிதம் என தனித்தனி தாளில் எழுத வேண்டும் என்றார். அதன்பிறகு, அப்படிக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றேன். தலைசிறந்த நேயர், சிறந்த நேயராக மொத்தம் ஐந்து முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். எஸ்.செல்வம் அவர்களுக்கும் இதி பங்கு உண்டு என்பதை மறக்க முடியாது.

12) நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் என்னுடைய திருமண நாளுக்கு வாழ்த்து கூறி, தேன்மொழி அவர்கள் எனக்காக பெய்ஜிங் ஒலிம்பிக் பாடலை ஒலிபரப்பியது பற்றி கூற வேண்டுமானால் வார்த்தைகளே இல்லை. சீனாவின் புகழ்பெற்ற தாள் கத்தரிப்பில், ஒருமுறை டிராகன் படத்தை சீன வானொலியில் இருந்து எனக்கு அனுப்பியதை நான் ஒரு மருத்துவருக்கு கொடுத்தேன். அதை அவர் இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினார்.

13) 2012-ஆம் வருடம் சீனத்தமிழொலி இதழ்-3 புத்தகத்தில் நம் சீன வானொலியின் பணிபுரிபவர்களின் புகைப்படத்தை ஆவலுடன் கண்டு ரசித்தேன். அவ்வப்போது எடுத்துப் பார்த்துக் கொள்வேன். சிறுகுழந்தைபோல அடிக்கடி புகைப்படத்தை பார்ப்பது எனக்குள்ளே ஒரு சந்தோஷம்.

இப்படி நினைவுகளைகூறிக் கொண்டே போகலாம். என் உயிர் இருக்கும் வரை நினைவுகள் வந்து வந்து போகும்.

இப்படிக்கு,

சி.மல்லிகாதேவி

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040