"தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்"
கவியின் கனவினை மெய்பிக்க எத்தனையோ ஆயிரம் தமிழ் மக்கள் இருக்க, வேற்று நாட்டினர் மொழியினைக் கற்று, திறம்படக் கையாண்டு, தமிழோசையைப் பரப்புவது சிறப்பான விஷயமல்லவா? அதைத் தான் தொடர்ந்து ஐம்பது வருடங்களாக செம்மையாக செய்து வருகின்றனர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவினர். 56 உலக மொழிகளில், ஹிந்தி, வங்காளம், தமிழ் என்ற மூன்று இந்திய மொழிகளில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளை தருகிறது சீன வானொலி.
தமிழ் பேசும் சீன வானொலி தமிழ் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவரும் தனி ரகம். அவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சியில் தத்தம் விருப்பங்களைச் சுவையான முறையில் தரும் போது, தமிழை மேன்மேலும் கற்றுச் சிறக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட போது, தமிழொலியும் தமிழோசையும் பரப்பும் இந்தத் தமிழ்க் காவலர்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தத் தோன்றியது.
எத்தனை தான் கணிப்பொறியும் தொலைக்காட்சியும் இருந்த போதும், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் அதைப் பலரும் கேட்டுப் பயன்பெறுவதை மின்னஞ்சல் மூலமும் நேருக்கு நேர், நேயர் நேரத்தில் குரல்களின் மூலம் கேட்கும் போது, அவர்களது தமிழ்ப் பணி மேலும் சிறப்பாகத் தொடர நல்வாழ்த்துக்களை தமிழ் விரும்பும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாகக் கூற விரும்புகின்றேன்.
இத்துடன் சீன வானொலியைப் பற்றி நான் அறிந்து கொண்ட விதத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
சீன மொழியை கற்கும் போது தான் சீன வானொலி பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஹாங்காங்கில் கேன்டனீஸ் மொழியைத் தான் அனைவரும் பேசுவர். அது ஒரு வார்த்தைக்கு ஒன்பது ஒலி வடிவங்களைக் கொண்ட மிகக் கடினமான மொழி. அதனால் பதினேழு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த போது, மொழியைக் கற்க விரும்பிய போது, இங்கிருந்த சீன நண்பர்கள் அதைக் கற்பது கடினம் என்று கூறியதாலும், ஒலி வடிவத்தைச் சற்றே மாற்றிப் பேசினாலும் வெட்கித் தலை குனிய நேரும் என்று சொன்ன காரணத்தாலும் அதைக் கற்கும் முயற்சியை ஆரம்பத்தில் எடுக்கவேயில்லை. ஆனால் ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு, தோழிகள் பலரும் விரும்பியதால், அனைவரும் சேர்ந்து கேன்டனீஸ் மொழியைக் கற்கும் வகுப்பில் சேர்த்து சிறிதளவு பயின்றோம்.
ஹாங்காங் சீன அரசாங்கத்திற்கு ஆங்கிலேயர்களால் திருப்பித் தரப்பட்டச் சில வருடங்களுக்குப் பிறகு, ஹாங்காங் மக்களுமே சீன ( மாண்டரின் அல்லது புதோங்ஹ_வா) மொழியினை கற்க வேண்டியதாயிற்று. பள்ளியில் பாட திட்டம். அனைவரும் கற்க ஆரம்பித்தனர். கணவர் சீனாவிற்கு வேலை நிமித்தமாக அதிகம் செல்ல வேண்டிய காரணத்தால், மொழியின் முக்கியத்துவம் உணர்ந்து, அவரும் கற்க வேண்டியதாயிற்று. அவரது அலுவலகத்தில் அனைவரும் சீன மொழியைக் கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. குடும்பத்தினரும் கற்கலாம் என்று சொன்னதால், முதன்முதலில் மாண்டரின் மொழி வகுப்பில் சேர்ந்தேன். பத்து அமர்வுகளில் கொஞ்சம் கற்க முடிந்தது. வார்த்தைக்கு நான்கு ஒலி அமைப்புக் கொண்ட சீன மொழி, கேன்டனீஸ் மொழியை விட எளிதாகத் தெரிந்தது. இலக்கணம் கொண்ட இம்மொழியை கற்கச் சுவாரசியமாகவும் இருந்தது.
மேலும் பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது, இணையத்தின் உதவியை நாடினேன். அப்போது, சிசிடிவி இணையதளத்தில் பல்வேறு பட்ட வகையில் மொழி கற்கும் காணொளிகள் இருந்தன. அவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. அதில் சிறிதளவு கற்க முடிந்தது.
அந்த நேரத்தில், நான் தினமலர் செய்தியாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். ஹாங்காங் நிகழ்வுச் செய்திகளை அனுப்புவேன். அதை அவர்கள் செய்தித்தாளில் அச்சிடுவதோடு, தினமலர் இணையதளத்திலும் வெளியிடுவார்கள். ஜப்பான்-சீனா பக்கம் ஒன்று இருக்கிறது. அதில் பல்வேறு விஷயங்கள் அவ்வப்போது தளமேற்றப்படும். அந்த வகையில் ஒரு முறை சீனத் தமிழ் வானொலி பற்றிய சின்னம் இருந்தது. அதைச் சொடுக்கிய போது தான், எனக்கு தமிழ்ச் சீன வானொலியின் அறிமுகம் ஏற்பட்டது. வானொலி என் கணிப்பொறியின் அமைப்பின் காரணமாக வேலை செய்யவில்லை. இருந்த போதும் அதில் "தமிழ் மூலம் சீனம்" என்ற பகுதி என்னைக் கவர்ந்தது. அதில், தமிழில் சீன மொழியைப் பயிற்றுவிப்பது கண்டு மகிழ்ச்சி கொண்டேன். உடன் என் தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி அதன் மூலம் சீனம் கற்ற முயன்றேன்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அதைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சீனர்கள் அழகாகத் தமிழில் நிகழ்ச்சி தருவது மகிழ்ச்சியையும் கொடுத்தது. நான் முதன்முதலில் கேட்டது செய்திகள். அதன் பிறகு பயணம் பற்றிய நிகழ்ச்சி. கதைப்பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மூலம் தான் நான் சீனப் பழங்குடியினர் பற்றி அறியும் விருப்பம் ஏற்பட்டது. உய்குர் இன மக்கள் பற்றி அறிய முயன்ற போது, அவர்களது கதைகள் நமது மரியாதை ராமன் கதைகள் போல் இருந்ததைக் கண்டேன். அதை மொழியாக்கம் செய்து திண்ணை வாசகர்களுக்கும் தந்தேன். தினம் கேட்க முடியாவிட்டாலும் கேட்ட நிகழ்ச்சிகள் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.
இணையதளத்தில் அவர்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகள் என்னை அதில் பங்கேற்கத் தூண்டின. திபெத் மடாலயங்கள் பற்றிய போட்டியில் கலந்து கொண்ட போது, நான் வாழும் மாநிலத்தில் திபெத் மடாலயத்தின் பிரிவு இருப்பதை அறிந்த போது, ஆச்சரியப்பட்டு, அதைப் பற்றி ஒரு கட்டுரையை கர்நாடக சங்க இணைய தளத்தில் எழுதினேன்.
தமிழ்ச் சீன வானொலி எனக்கு பல அரிய விஷயங்களை அறியும் வாய்ப்பினைக் கொடுத்தது. அதற்கு இவ்வாண்டு 50 வயது. இதை அறிந்த பின் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லச் துணிந்தேன். வானொலியின் பணி தொடர்ந்து, தமிழ் நேயர்களுக்கு சீனா பற்றிய செய்திகள் பலவற்றையும் அறியும் வாய்ப்பினை ஏற்படுத்தி, மேன்மேலும் வளர யாவரும் வாழ்த்துக் கூறுவோம் வாருங்கள்.
சீன வானொலியை tamil.cri.cn என்ற தளத்தில் காணலாம்.
திபெத் மடாலயத்தைப் பற்றிய விவரத்தை
http://kshk.org/index.php/component/content/article/11-travelogue/54-mini-tibet-in-karnataka
அறியலாம்.
வாழ்த்துக்கள்.