தற்போது, சீனாவில் 43 மரபுச் செல்லங்கள், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகில் மூன்றாவது இடம் வகிக்கிறது. சீனாவின் 29 பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், யூனேஸ்கோவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. யூனேஸ்கோவின் செயல் தலைவர் அல்ஸாண்ந்திரா கும்மின்ஸ் அம்மையார் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். தற்போது, பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புத் துறையில் சீனா அதிகமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் தொடர்புடையத் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"சீனாவின் சில பண்பாட்டு மரபுச் செல்வங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டுள்ளேன். அவை அனைத்தும் எனது மனதில் ஆழப்பதிந்துள்ளன. பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பில் சீனா அதிகமான திறப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதனால், உள்ளூர் பொது மக்களும், என்னைப் போன்ற வெளிநாட்டுப் பயணிகளும் சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வங்களை பற்றி மேலும் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் இது தொடர்பான பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பயிற்சித் திட்டம் சீனாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பில் ஈடுபட புதிய தலைமுறை பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியாளர்களை ஈர்க்கும் முக்கியத்துவத்தை சீனா புரிந்து கொண்டுள்ளதை இது காட்டுகிறது" என்றார் அவர்.