அறிஞர்களே தமிழ் மொழி வல்லுனர்களே நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தொன்மையான மொழித் தமிழ் மீது பற்றுக்கொண்டு அதனை நட்பு பாலமாக பரவிடச் செய்யும் வகையில் சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் துவங்கியது. அது முதல் இன்றுவரை ஒரு நாள் கூட எக்காரணத்திற்காகவும் நிகழ்ச்சி தடைபடாமல் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
சீன வானொலியின் தமிழ் பண்பலை நிகழ்ச்சி 2010ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் இலங்கை தலைநகர் கொழும்பில் ஒலிபரப்பாகி வருகின்றது. நாள்தோறும் 4 மணிநேர நிகழ்ச்சிகள் பண்பலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை வானொலி ஒலிபரப்பு, ஊடக இணையம், பண்பலை ஒலிபரப்பு, செல்லிட பேசி செய்தி வெளியீடு ஆகியவை இடம் பெறும் பன்முக செய்தி ஊடகமாக தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது. அதன் பயன்பாடும் செல்வாக்கும் நாள்தோறும் வளர்ந்து விரிவாகி வருகின்றன. இது மட்டுமல்ல வெளிநாடுகளின் செய்தி ஊடகங்கள் சீனா பற்றிய செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை அறியும் முக்கிய வழியாகவும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு உருவாகியுள்ளது.
உலகத்திலுள்ள அனைத்துக் கலைச்செல்வங்களையும் தமிழில் வெளிக்கொணர வேண்டும் என்ற மகாகவி பாரதியார் அவர்களின் கருத்து போற்றுவதற்குரியது. உலகிலுள்ள அனைத்து தத்துவங்களும், கொள்கைளும், பயன்பாடுகளும், செயல்பாடுகளும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது.
அதே வழியில் சீன செல்வங்களை தமிழிலும், தமிழ் வளங்களை சீன மொழியிலும் கொண்டு சென்று, தமிழர்கள், சீனர்கள் இடையில் பரிமாற்றத்தை வளர்ப்பதன் மூலம் இந்தியர்கள், சீனர்கள் இடையில் நட்பையும், என்றும் நிலைக்கும் தொடர்பையும் வளரச் செய்வதை தமிழ்ப் பிரிவு தனது தலையாய பணியாக கருதி செயல்பபடுகின்றது. அந்நிலையில் தமிழ்ப் பிரிவுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை பயன் பருத்தி தமிழை சீனர்கள் நடுவில் கொண்டு செல்லும் முயற்சிகள், வழிமுறைகள், அதனால் ஏற்பட்டுள்ள தமிழர்கள்- சீனர்கள் நட்புறவு, சீனாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.