தமிழர்களுடன் நட்புறவு
சீன வானொலி தமிழ்ப்பிரிவு மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமகிழ்வு அடைகின்றோம். இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழர்கள் பரவிவாழும் நாடுகளில் எல்லாம் எமது தொடர்புகள் வளர்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக சீன வானொலிக்கு அனுப்பப்படும் மொத்தக் கடித எண்ணிக்கையில் தமிழ்ப்பிரிவே அதிக முறை முதலாவது இடத்தையும் இல்லாவிட்டால் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின் படி இருபத்தெட்டாயிரத்திற்கும் மேலான நேயர்கள் எமது தமிழ் ஒலிபரப்பை கேட்டு இரசிக்கின்றனர்.
தமிழ் நாட்டில் மட்டும் எம்மிடம் பதிவு செய்து கொண்ட நூற்றுக்கணக்கான சீன வானொலி தமிழ் நேயர் மன்றங்கள் உள்ளன. பதிவு செய்யாமல் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நேயர்களும் பலர் உள்ளனர். ஏறக்குறைய ஆண்டுதோறும் அனைத்து நேயர் மன்றங்களின் உறுப்பினர்களும் ஒன்று கூடி கருத்தரங்கு நடத்துவது, சீன வானொலி ஒலிபரப்பையும், அதன் செயல்பாடுகளையும் விவாதிக்கும் வழிமுறையாக அமைந்திருக்கின்றது. தமிழ் நாட்டிலுள்ள பலரும் நேரடியாக சந்திக்கவும், கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் உதவும் மேடையாக இந்த நேயர் மன்ற கருத்தரங்குகள் பங்காற்றுகின்றன.
தமிழகத்தில் நேயர் மன்ற கருத்தரக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பயன்படுத்தி பரந்தரவில் உள்ளூர் செய்தி ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு பிரதிநிதி குழுவின் பணி பயணம் பற்றியும் சீன வானொலி பற்றியும் பரவல் செய்ய நேர்காணல், தொலை பேசி மூலம் தொலைகாட்சியில் நேருக்கு நேர் உள்ளிட்ட பல்வகை நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதிநிதி குழுவினர்கள் பாடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளின் மூலம் தமிழகத்தில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மேலும் அதிகமானோரால் அறிந்து கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் அவர்களின் நண்பர் மூலம் சீன வானொலி தமிழ்ப் பிரிவு பெய்ங்கில் இருப்பதை அறிந்த பின் பெய்ஜிங்கில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் போது தமிழ்ப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பேட்டியளிப்பது வழக்கமாக இருக்கின்றது. அவர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீன வானொலி சின்னம் அச்சடிக்கப்பட்ட அன்பளிப்புகளை அவர்களுக்கு நினைவு பொருளாக வழங்குவதும் வழக்கம் ஆகும்.