தமிழ் மொழி வளர்ச்சியில் பங்கு,தூய தமிழ் மொழிப் பயன்பாடு
கணினி உலகில் உலமே சிறு கிராமம் போல் சுருங்கிவிட்டது என்பதை நாம் நன்கறிவோம். பல மொழிகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களை முன்பைவிட இப்போது அறிந்து கொள்வது மிகவும் எளிதாகிவிட்டது. இது பல்வேறு நன்மைகளை வழங்கினாலும், சில சீரழிவுகளையும் கொண்டு வருகிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். அத்தகைய சீரழிவுகளில் ஒன்று தான் நமது மொழியில் அயல் மொழிகளின் ஆதிக்கம். பேசுவதற்கு எளிதாக இருக்கிறது, பிற மொழி கலப்போடு பேசினால் மதிப்பு என்ற பொய்யான எண்ணங்களை மனதில் கொண்டவர்களாய் அதிக பிற மொழி சொற்களை பயன்படுத்த பழகிவிட்டோம்.
பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், காலப்போக்கில் அதற்கான தமிழ்ச் சொற்களும், புதிய சொல் உருவாக்கங்களும் மறைந்துபோகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதை மையப்படுத்தி தான் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தூய தமிழில் தனது சேவையை வழங்கி வருகிறது.
மக்களுக்கு எளிதாக புரியவேண்டும். அத்துடன் தூய தமிழ் பயன்பாடும் இருக்க வேண்டும் என்பது தமிழ்ப் பிரிவின் நிலைப்பாடாக இருக்கிறது. எனவே முடிந்தவரை பிறமொழி மற்றும் வடமொழிச் சொற்களில்லாமல் இருப்பதையே தமிழ்ப் பிரிவின் முதன்மை கொள்கையாகக் கொண்டு சேவை புரிந்து வருகின்றோம். சிமெண்டு, கார், டாக்ஸி என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழர்கள் இன்றைக்கு எளிதாக பயன்படுத்துகின்ற சொற்களாகவுள்ளதை தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆனால் காரை, சீருந்து, வாடகை சீருந்து என்ற சொற்களையே அவர்கள் தாங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.