சீனத் தொழிலாளர் சங்கத்தின் 16-வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட சீனத் தலைமை அமைச்சர், அக்டோபர் 21ஆம் நாள் திங்கட்கிழமை, பொருளாதார வளர்ச்சிக் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
இவ்வாண்டு, பொருளாதார வளர்ச்சிக்கான நியாயமான வரம்புகளை உறுதிச்செய்த அடிப்படையில், பொருளாதாரக் கட்டமைப்பைச் சரிப்படுத்தி சீர்திருத்தத்தை முன்னேற்றுவதன் மூலமாக பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்துள்ளது.
பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளோடு, பொருளாதார அதிகரிப்பு, விலைவாசி ஆகிய முக்கிய குறியீடுகள் சீராக உள்ளன. மேலும், பொருளாதாரக் கட்டமைப்பில் ஆக்கமுள்ள மாற்றங்கள் காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் முன்னேறும் பாதையில் உள்ள இடர்பாடுகளையும் அறைகூவல்களையும் சமாளிக்க, தொழிலாளர்கள் அடங்கிய பொது மக்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை வளர்ப்பதன் அடிப்படை நோக்கம், பொது மக்களுக்கு நன்மை பயப்பதாகும். எனவே, தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் காப்பது, பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பு உடைய முதுமைக் கால காப்புறுதி, மருத்துவச் சிகிச்சை, வீடு வசதி போன்ற பிரச்சினைகளைப் பயனுள்ள முறையில் தீர்ப்பது, மேலதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய குறிக்கோள்களை அடையும் நிலையில், சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி கொண்டு வரும் சாதனைகளை தொழிலாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று லீ கெச்சியாங் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார்.