• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரம்பரிய ஊடகங்களையும் புதிய ஊடகங்களையும் பயனுள்ள வகையில் ஒருங்கிணைப்பது எப்படி?
  2014-04-08 17:19:00  cri எழுத்தின் அளவு:  A A A   

இருபத்தியோராம் நூற்றாண்டு ஊடக உலகிற்கு அளித்துள்ள தொழில் நுட்பங்கள் வரமா? சாபமா? புதிய தொழில்நுட்பங்களின் வருகை காரணமாகப் பல நாளிதழ்கள் மூடப்பட்டுவிட்டன. செய்தி சேகரிக்கும், அதை வெளியிடும் முறைகள் மாறி விட்டன. செய்தியை வெளியிடுவதில் இருந்த காலத்தின் அளவு மாறிவிட்டது. எழுதப்பட்ட சொல் என்பது முக்கியத்துவம் இழந்துவிட்டதால் எழுத்தாற்றல் என்பது அவசியமற்றதாகி விட்டது. புதிய தொழில்நுட்பங்கள் பாரம்பரியமான அச்சு ஊடகங்களுக்குக் குழி தோண்டுகின்றனவா?

இல்லை. அவை ஒரு புதிய தலைமுறையின் வாசகர்களை, நேயர்களை ஊடகங்களை நோக்கி அழைத்து வந்திருக்கின்றன. தொடர்புப் பின்னல் என்பது எளிதாகிவிட்டது. சொற்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், ஒலி எனப் பலவற்றை ஒருங்கிணைத்து சுருக்கி, பல்லூடக அனுபவத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் அளிக்கிறது. தகவல்களை ஆவணப்படுத்தல், மீட்டெடுத்தல், பகிர்ந்து கொள்ளல் எல்லாம் சிக்கலற்றதாகிவிட்டது

காலம் காலமாகப் பத்திரிகைகளில் செய்தி அறைகள் இயங்கி வந்த முறையைப் புதிய தொழில்நுட்பங்கள் மாற்றிவிட்டன. பத்திரிகையாளர் என்பவர் இனி, வார்த்தைகளின் வேந்தராக சொல்லேர் உழவராக மாத்திரம் இருக்க முடியாது. அவர் தொழில் நுட்பத்தை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும். அவர் தகவல்களின் தொகுப்பாளராக மாத்திரம் இருக்க இயலாது. அவர் ஆய்வாளராகவும் மாற வேண்டும். கிணற்றுத் தவளையாகக் காலம் கழிக்க முடியாது. கேள்விகளோடு நிற்கும் உலக சமூகத்தை எதிர் கொண்டாக வேண்டும்.

உண்மைதான். மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆனால் அவை நல்லதை நோக்கி நடப்பவையா? அல்லது அழிவை அழைத்து வருபவையா? ஒவ்வொரு ஊடகமும் தனக்கு முந்தைய ஊடகங்களிலிருந்து மாற்றமும் வளர்ச்சியும் கண்டு வந்திருக்கின்றன என்பதை ஊடக வரலாறு சொல்லும். வானொலி அறிமுகமானபோது, அது நாளிதழ்களை அழித்துவிடும் எனக் கருதப்பட்டது. தொலைக்காட்சி வந்த போது வானொலிகளைத் தேவையற்றதாக்கிவிடும் எனக் கருதப்பட்டது.இணைய தளங்கள் தொலைக்காட்சிகளை விட விரைவாகச் செய்தி அளித்ததால் தொலைக்காட்சிகளின் யுகம் முடிந்துவிடும் எனச் சொன்னார்கள். வலைப்பூக்கள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் உடனடிக் கருத்துப் பரிமாற்றம் சாத்தியம் என்பதால் இணையச் செய்தித் தளங்களுக்கு இனி அவசியமிருக்காது என்று பேசினார்கள். ஆனால் இன்று எல்லாம் ஒன்றோடு ஒன்று பிரிக்க இயலாத நிலையில் இயங்கும் ஓர் செய்தி உலகம் உருவாகியுள்ளது. அது வசதிக்கேற்பத் தேர்ந்து கொள்ளப் பொதுமக்களுக்கு அநேக வாய்ப்புகளை அளிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் நம் முன் இருப்பது பிரச்சினையல்ல, ஓரு வாய்ப்பு. ஊடகங்கள் ஒருங்கிணையும் சூழல் என்பது, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ள பாரம்பரிய ஊடகங்களுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு

பாரம்பரிய ஊடகங்கள் புதிய ஊடகங்கள் இவற்றினிடையே இரண்டிற்கும் பயனளிக்கும் சூழலை உருவாக்க வேண்டுமானல், ஊடகங்களை ஒன்றிணைப்பது, ஓர் உத்தியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த ஏழு அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். அவை:

1. தகவல் பரிமாற்றம்

2, செயலில் உறுதிப்பாடு

3. ஒத்துழைப்பு

4. ஊதியச் சீரமைப்பு

5.பணிக் கலாசாரம்

6.போட்டிகளை எதிர்கொள்ளல்

7. பயனர்

தகவல் பரிமாற்றம் என்பதுதான் நம் தொழிலின் அடிப்படை. தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடாத நிலையில் நாம் ஓர் ஊடகமாக இருக்க இயலாது. புதிய தொழில்நுட்பங்கள் செய்திப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி விட்ட சூழலில் அச்சு ஊடகங்கள் அவசியமற்றதாகத் தோன்றலாம். மறுநாள் காலை வீட்டின் வாயிலில் வந்து விழுகிற நாளிதழைவிட 140 எழுத்துருக்களில் அனுப்பப்படும் குறுந்தகவல் உடனடியாகச் செய்தியைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.

ஆனால் ஒரு நாளிதழ் ஒரு டிவிட்டர் கணக்குத் துவங்கி, அதில் 'சற்று முன்" நடந்த செய்திகளை அளிக்குமானால் ஆயிரக்கணக்கில் அந்தக் கணக்கு ஆதரவாளர்களைப் பெறும். அந்தச் செய்தி குறித்த முழு விவரங்களையும் பின்னணியையும் மறுநாள் தனது நாளிதழில் விவரிப்பதற்கான முன்னோட்டமாக அந்தக் குறுந்தகவல் அமையுமானல், அந்த ஆயிரக்கணக்கானவர்களில் கணிசமான பேரைத் தன் வாசகர்களாகப் பெறலாம் டிவிட்டரில் செய்திகளை அனுப்பவும் பெறவும் செய்தி அறையில் ஒரு குழுவை உருவாக்கிக் கொள்வதும், குறிந்தகவல்கள வரப்பெற்றவுடனேயே அதன் பின்னணித் தகவல்களைத் திரட்டவும் ஆராயவும் ஒரு குழுவை அமைத்துக் கொள்வதும் அத்தனை கடினமான பணி அல்ல

வெளியுள்ள வாசகர்களோடு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முற்படும் அதே நேரம், நாம் நம் நிறுவனத்தில் உள்ள ஆசிரியர் பிரிவில் பணியாற்றாத பிறருடனும் சரியான, திண்மையான தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாறி வரும் வர்த்தகச் சூழல், புதிய வாய்ப்புக்கள் இவற்றைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். செய்தி வெளியிடும் இணைய தளங்களின் மூலம் பெரிய வருமானம் கிடையாது. அப்படியிருக்க ஒரு அச்சு ஊடகம் இதில் இறங்குவதால் நமக்கென்ன லாபம் என்ற கேள்வியை வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் எழுப்புவார்கள். பத்திரிகையின் பெயருக்குள்ள மதிப்பைக் காப்பாற்றுவதற்கும், புதிய தலைமுறை வாசகர்களைச் சென்றடைவதற்கும் இத்தகைய முயற்சிகள் அவசியம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து அதை ஏற்கச் செய்ய வேண்டும்

நம் செயலில் நமக்கு உறுதிப்பாடு இருக்குமானால் இதை சாத்தியமாக்க இயலும். ஊடகத்தின் பெயருக்குள்ள மதிப்பை உன்னதமான செயல்களின் மூலம்தான் நிலைபெறச் செய்ய முடியும். செய்யும் செயல்களில் உன்னதம் என்பது திறன் சார்ந்தது மாத்திரம் அல்ல. அது மனோபாவம் சார்ந்தது.செய்தி நிறுவனங்கள் செங்கற்களால் கட்டப்படுவதில்லை. நம்பகத்தன்மைகளால் கட்டி எழுப்பப்படுகின்றன. புதிய ஊடகங்கள் செய்திகள் குறித்த உடனடிக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு வகைசெய்வதால் நாம் செல்லும் பாதையைச் உடனடியாகச் செப்பனிட்டுக் கொள்ள முடியும்

அச்சு ஊடங்களில் குறிப்பாக நாளிதழ்களின் செய்தி அறையில், ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்களிடையே ஒத்துழைப்பு இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அச்சு ஊடகத்தை புதிய ஊடகத்தோடு ஒருங்கிணைக்கும் போது, மூத்த பத்திரிகையாளர்கள் புதிய ஊடகங்களைத் தங்களுக்கு உதவும் சகா என மதிக்காமல், வெறும் பக்க வாத்தியமாகக் கருதுவது இயல்பானது.செய்தி அறைகள் பல ஆண்டுகளாகத், திட்டவட்டமாக வரையறுத்துக் கொண்ட அதிகாரப் படிநிலையை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் புதிய ஊடகங்களில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. 'மேலிருந்து ஆணை பெறுவது' என்ற முறை மாறிவருகிறது.

செய்தியாளர்களின். குறிப்பாக அச்சு ஊடகங்களில் பணியாற்றுவோரிடம் திறன் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகாரித்து வருவதால், ஊதியம் என்பது ஒரு முக்கிய விஷயமாகி வருகிறது..பணியாளர்காளின் பங்களிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், ஒருவரிடம் கூடுதலாக உள்ள திறன். அதில் அவருக்குள்ள மேம்பட்ட ஆற்றல், இவற்றை எப்படி மதிப்பிடுவது, அதற்கேற்ற ஊதியம் எப்படியளிப்பது என்பது இன்று ஊடக நிர்வாகிகள் எதிர்கொள்ளும் ஓர் கேள்வி. டிஜிட்டல் தொழில்நுட்பக் காலத்தில், செய்தியாளர்களுக்கு ஒரு துறையில் தனித்திறன் இருக்கலாம் ஆனால் பல்லூடகத் திறன் கொண்டவர்களுக்கே அதிக மதிப்பு. இதனால் பலருக்கு மனக் குமைச்சல் ஏற்பட்டு பணிச் சூழலில் சுமூகமற்ற நிலை தோன்றுகிறது. இதற்கான ஒரு தீர்வு பயிற்சி. பராம்பரியப் பத்திரிகையாளர்களுக்குப் பல்லூடகப் பயிற்சி அளித்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆண்டின் இறுதியில் அவர்களைப் பற்றிய திறன் மதிப்பீட்டின் போது கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற ஊதியமளிப்பது ஒரு தீர்வாக அமையலாம். செய்தியாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் கூடுதலான பயிற்சி, புதிய பொறுப்புக்கள் இவற்றுக்கு கூடுதல் ஊதியம் அளிப்பது அவசியம். பயிற்சி, வளர்வதற்கான வாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், மகிழ்ச்சியான பணிச் சூழல் கிடைக்கப் பெற்ற பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஊடகங்களில் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாரம்பரிய ஊடகங்களையும் புதிய ஊடகங்களையும் ஒருங்கிணைக்கும் போது அவற்றிக்கிடையேயான பலவேறுவிதமான பணிக் கலாசாரங்களையும் ஒருங்கிணைப்பது அவசியம். அச்சு, ஒலிப்பரப்பு மின்னூடகங்கள் இவற்றிடையே வெவ்வேறுவகையான பணிக்கலாச்சாரங்கள் நிலவுகின்றன. வெவ்வேறு அர்தத்தில் சொற்கள் வழங்குகின்றன, வெவ்வேறு விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக பைட் என்ற சொல்லை ஒலிபரப்பு ஊடகங்களில் உள்ளவர்களில் அதை ஒலி நறுக்கு என்றும், கணினி சார்ந்த ஊடகங்களில் உள்ளவர்கள் ஓர் மின்னணு அலகு எனவும், அச்சிதழ்களில் உள்ளவர்கள் 'கடி' என்றும் புரிந்து கொள்வார்கள். பட்ஜெட் என்ற சொல் நாளிதழ்களில் செய்திகளுக்கு எங்கு, எந்த அளவிற்கு இடமளிப்பது என்பதைக் குறிக்கும் சொல். ஆனால் அதை மற்ற ஊடகங்களில் உள்ளவர்கள் நிதி ஒதுக்கீடு எனப் புரிந்து கொள்வார்கள். மின்னணு ஊடகங்களின் ஒலி/ஒளித் துண்டுகள் வாசகர்கள்/நேயர்களைத் திருப்திப்படுத்தப் போதாது, சொற்களுக்கு ஆழமும் அர்த்தமும் கொடுப்பவர்கள் நாங்கள் என அச்சிதழாளர்கள் எண்ணுவது இயற்கை. சமூகத்தின் அசைவுகளைக் காண்கிறவர்கள், பதிவு செய்பவர்கள் தாங்கள்தான் என தொலைக்காட்சியினர் கருதிக் கொள்வார்கள். உடனடிக் கருத்துப் பரிமாற்றம், எல்லையற்ற இடம் போன்ற காரணங்களால் இணையம் வலிமை கொள்கிறது ஒவ்வொரு ஊடகத்திற்கும் உள்ள சிறப்பை மற்றொரு ஊடகத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில்தான் ஊடகங்களின் ஒருங்கிணைப்பு வெற்றி காண்கிறது

புதிய ஊடகங்களின் வரவையடுத்து, வணிகப் போட்டி என்பது புதிய பரிணாமங்கள் பெற்றுவிட்டன, இணையத் தொடர்பின் காரணமாக உள்ளூர் ஊடகங்களோடு மட்டுமன்றி, தேசிய, சர்வதேச ஊடகங்களோடு போட்டியிட வேண்டிய நிலை எழுந்துள்ளது. இன்று செய்தி ஊடகங்கள் அவர்களின் பழைய நண்பர்களோடு மட்டுமல்ல, யாகூ, கூகுள் நியூஸ், மைக்ரோசாஃப்ட் எம்.எஸ்.என், போன்ற பன்னாட்டு ஜாம்பவான்களோடு போட்டியிட வேண்டியுள்ளது.

ஊடகங்கள் போட்டியிடும் இன்னொரு விஷயம், நேரம். செய்திகளை 24 மணி நேரமும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருப்பதால் செய்திகளை அளிப்பது தீவீரமடைந்துள்ளது. இன்னொரு புறம் பயணம், பணி குடும்பம், அரசு, சமூகக் கடமைகள், பொழுது போக்கு எனப் பலவாறாக ஒருநாளில் பல திசைகளில் ஓடிக் கொண்டிருக்கும் மக்களிடம் தங்களுக்கென சிறிது நேரத்தை செலவிடுமாறு செய்ய ஊடகங்கள் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது

இந்த இரண்டு போட்டிகளையும் எதிர்கொள்ளச் சிறந்த வழி பாரம்பரிய ஊடகங்களுக்கும் புதிய ஊடகங்களுக்குமிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பல்லூடக அனுபவத்தை அளிப்பது, அல்லது திறன் மிகு கைபேசிகளில் செய்தியை அளிக்கும் 'புஷ் மீடியா'க்களை உருவாக்குவது.

தொலைக்காட்சி அறிமுகமான போது, நாங்கள் வெறும் "நேயர்கள்" அல்ல, அச்சிடப்பட்ட, அழியாத எங்கும் எடுத்துச் செல்ல எளிதான ஆவணத்தின் வாசகர்கள், என அச்சு ஊடகத்தின் ஆதரவாளர்கள் பெருமிதம் கொண்டார்கள். அவர்களின் அபிமான பத்திரிகை ஆசிரியர்களுக்கு நீண்ட கடிதங்கள் மூலம் தங்கள் பாராட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பத்திரிகையாசிரியர்களின் அகன்ற, ஆழமான அறிவை மதித்தார்கள். ஆனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, பொருள் பிழை இவற்றைத் சுட்டிக் காட்டத் தயங்கியதில்லை. சிலர் சிறிய விஷயங்களுக்குக் கூட சளைக்காமல் நெடிய விவாதங்களை மேற்கொள்வார்கள்

இன்று ஊடகங்கள் பயனர்களை எதிர்கொள்கின்றன. தங்களுடைய மின் உரையாடல்களில், குறுந்தகவல்கள், முகநூல் நிலைத் தகவல்கள் வலைப்பதிவுகள், இணையப் பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளத் தகவல்களை ஊடகங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். இன்று பல இணைய தளங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் விஷய தானம் செய்பவர்களாக அச்சிதழ்கள்தான் இருக்கின்றன என்பதும் அதே நேரம் பல பத்திரிகைகள் மின்னணு ஊடகங்களால் மூடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதும் இன்று ஊடக உலகில் நிலவும் ஓர் விசித்திரம்.

பாரம்பரிய ஊடகங்களில் ஆசிரியர், செய்தியாளர், தயாரிப்பாளர்கள் என்ற பதவிகள் பொறுப்பு என்ற பெயரில் தகவல்கள் வடிகட்டப்படுவதற்கு அதிகாரமளித்தன. ஆனால் இணையம் பயனர்களையே செய்தியாளர்களாக மாற்றிவிட்டது. ஒரு கணினி, ஒரு மோடம், கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால் எவரும் இணையத்தில் விஷயதானம் செய்பவராகிவிடலாம். புதிய ஊடகங்களின் வருகையால், குடிமைச் செய்தியாளர்கள் (Citizen Journalists) என்றொரு புதிய வகைச் செய்தியாளர்கள் உருவாகியிருக்கிறார்கள், இதன் காரணமாக பயனாளர்களே செய்திகளைத் தீர்மானிக்கிறார்கள்

செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் முறையும், ஊடகத் தொழிலின் சூழலும் புதிய தொழில்நுட்பங்களால் மாறியிருக்கின்றன என்ற போதிலும் பாரம்பரிய ஊடகங்கள் இந்த வாய்ப்புக்களை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். பாரம்பரிய ஊடகங்கள் புதிய ஊடகங்களை எதிரிகளாக, போட்டியாளர்களாகக் கருத வேண்டியதில்லை. ஒரு பயன் தரும் உறவிற்க்கான பங்குதாரர்களாகக் கருதி அவர்களை அணுகலாம். புதிய தொழில்நுட்பங்கள், பாரம்பரிய ஊடகங்களுக்கு. பல்லூடக ஆற்றல் மூலம், அவற்றிற்கு புத்துணர்வும் புது வேகமும் அளிக்குமாதலால், அவை முன்னைவிட வலிமை கொண்டவைகளாக ஆகவும் வாய்ப்புண்டு.

——மாலன்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040