சீன அரசுத் தலைவர் ஷி ச்சிந்பிங் தென் கொரிய அரசுத் தலைவர் பாக் கியுங் ஹுய் அம்மையார் ஆகியோர் 3ஆம் நாள் பிற்பகல் சியோல் நகரில் 3 மணி நேரப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தரப்புகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை என்பதில் ஊன்றி நிற்பதாக இரு தரப்புகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. கடல் எல்லை வரைவு பற்றிய பேச்சுவார்த்தையை 2015ஆம் ஆண்டில் துவக்கி, இரு நாட்டு தடையில்லா வணிக மண்டலத்தைக் கட்டியமைப்பது பற்றிய பேச்சுவார்த்தையை 2014ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றும் என்றும் இவ்வறிக்கை கூறுகின்றது.
தடையில்லா வணிக மண்டலத்தைக் கட்டியமைப்பது பற்றி சீனாவும் தென் கொரியாவும் 2012ஆம் ஆண்டு மே திங்கள் முதல் விவாதிக்கத் துவங்கின. வரி விலக்கல் உற்பத்தி பொருட்களின் விகிதம், இறக்குமதி வகிதம் ஆகியவை பற்றி இரு தரப்புகளும் ஒத்த கருத்துக்கு வந்துள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இப்பேச்சுவர்த்தையைக் கூடிய விரைவில் நிறைவேற்றும் மனவுறுதியை இரு தலைவர்களும் தெரிவித்தனர். ஷி ச்சிந்பிங் கூறியதாவது
இவ்வாண்டின் இறுதிக்குள் சீன-தென் கொரிய தடையில்லா வணிக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தையை நிறைவேற்ற இரு நாடுகளும் முயற்சி மேற்கொள்ளும். 2015ஆம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தகத் தொகை 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்ற இலக்கை எட்டுவதற்கு மேலும் சிறந்த நிபந்தனைகளை உருவாக்க முயற்சி செய்வோம் என்றார் அவர்.
தென் கொரியாவில் ரென் மின் பி யுவானுக்கும் தென் கொரிய டாலருக்கும் இடையில் நேரடி வர்த்தக அமைப்புமுறையை உருவாக்குவதற்கு இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
கடல் எல்லை பற்றிய பேச்சுவார்த்தையை 2015ஆம் ஆண்டில் நடத்த துவங்குவதெனவும் இரு நாடுகளும் அறிவித்தன. தற்போது இரு நாடுகளுக்கிடையில் கடல் எல்லை கோடு அதிகாரப்பூர்வமாக வகுக்கப்படவில்லை. கடல் எல்லை பற்றி கூடிய விரைவில் உடன்படிக்கையை எட்டுவது இரு நாடுக்களுக்கிடை மீன்பிடிப்புச் சர்ச்சையை நீக்குவதற்குத் துணை புரியும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
சீன அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பின், ஷி ச்சிந்பிங் தென் கொரியாவில் பயணம் மேற்கொள்வது இது முதல் முறை. கொரிய தீபகற்ப அணுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனாவின் முக்கிய பங்கு, கூட்டணி தற்காப்பு அதிகார தடையை ஐப்பான் நீக்குவதால் வடக்கிழக்காசியாவில் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலை முதலிய பின்னணியில் அரசுத் தலைவர் ஷி ச்சிந்பிங்கின் இப்பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.