2014ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வேலை செய்பவர் பற்றிய அறிக்கையை சீனத் தேசிய சுகாதார மற்றும் குடும்பநலத் திட்ட ஆணையம் நவம்பர் 18ஆம் நாள் வெளியிட்டது. அதன்படி, தற்போது சீனாவில் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவரின் எண்ணிக்கை 24 கோடியே 50 இலட்சமாகும். இது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியாகும். இவ்வறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.
கடந்த ஆண்டில் இருந்த்தை விட சீனாவில் இப்பகுதி மக்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி அதிகரித்துள்ளது. சீனத் தேசிய சுகாதார மற்றும் குடும்பநலத் திட்ட ஆணையத்தின் தொடர்புடைய அதிகாரி வாங் ச்சியேன் கூறியதாவது
மக்கள் சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து செல்ல விரும்பும் இலக்கு மாறவில்லை. பெய்ஜிங், ஷாங்காய் முதலிய மாநகரங்கள் இன்னும் அதிக மக்களை ஈர்க்கின்றன. மேலும், இடம்பெயர்ந்து வேலை செய்பவரின் சராசரி வயது அதிகரித்து வருகிறது. அவர்கள் திருமணம் மற்றும் மகப்பேறு வயதும் அதிகரித்து வருகிறது என்று அவர் சில தனிச்சிறப்பு தகவல்களை அளித்தார்.
இடம்பெயர்ந்து வேலை செய்பவரைப் பொறுத்த வரை, வேலை வாய்ப்பு, வீடு வசதி, குழந்தைகளின் கல்வி, மருத்துவம், சமூக்க் காப்புறுதி முதலிய பிரச்சனைகள் மிக முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளாக பெற்றோருடன் சொந்த ஊரை விட்டுச் செல்லும் குழந்தைகளின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. 2013ஆம் ஆண்டின் இறுதிவரை, பெற்றோருடன் இடம்பெயர்ந்துள்ள இலவச கல்விகற்கும் கட்டத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாகும். அவர்களில் 80 விழுக்காட்டினர் அரசு சார் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர்.
மேலும், இடம்பெயர்ந்து வேலை செய்பவருக்கு வசதி அளிக்க, அவர்களது மருத்துவக் காப்புறுதி அமைப்புமுறையை மேம்படுத்த அரசு முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறது. உள்ளூர் நகரவாசி மருத்துவக் காப்புறுதி, அரசு நிறுவனப் பணியாளர் காப்புறுதி, கிராமப்புற புதிய கூட்டுறவு மருத்துவக் காப்புறுதி ஆகியவை இடம்பெயர்ந்து வேலை செய்பவருக்கு வசதி அளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
மக்கள் இடம்பெயரும் பொது நிலைமையைப் பார்த்தால், தற்போது, பெய்ஜிங், தியேன் ச்சின், ஹே பெய் முதலிய பிரதேசங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு மெதுவாக உள்ளது. ஆனால், வெளியூரிலிருந்து வந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 2000 முதல் 2012ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் மேற்கூறிய 3 பிரதேசங்களில் நுழைந்துள்ளனர். உழைப்பாற்றல் மிக அதிகமாக தேவைப்படும் தொழில் நிறுவனங்கள் இடம்மாற்ற காரணத்தால், கடந்த சில ஆண்டுகளில் குவாங்துங், ச்சியாங்சூ முதலிய மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளரிகளின் எண்ணிக்கை மென்மேலும் குறைந்து வருகிறது.