சீனாவில் விவசாயிகளின் எண்ணிக்கை 75 கோடியாகும். மொத்த மக்கள் தொகையில் இது சுமார் 70 விழுக்காடு வகிக்கின்றது. கிராமப்புறங்களில் மக்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை பிரச்சினையைத் தீர்ப்பது மிக முக்கியமானதாகும். 2008ஆம் ஆண்டு முதல் உலக வங்கி 5 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகை வழங்கி சீன அரசுடன் ஒத்துழைத்து கிராமப்புற சுகாதார வளர்ச்சித் திட்டப்பணியை மேற்கொள்ளத் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் கிராமப்புறங்களில் சுகாதாரத் துறை வளர்ச்சி நிலைமையைப் பார்ப்போமா?
ஹேனான் மாநிலத்தின் சீய் மாவட்டத்தைச் சேர்ந்த சாங் யூ ச்சிங் என்பவருக்கு இவ்வாண்டு 71 வயது. இரு ஆண்டுகளுக்கு முன் அவர் நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைச் சேவைக்கு அவர் மனநிறைவு தெரிவித்தார்.
முன்பு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முதலில் சொந்த செல்வில் கட்டணம் கொடுக்க வேண்டும். தற்போது அப்படியே இல்லை. மொத்த செலவில் மிக குறைவான பகுதி சொந்த செலவில் இருக்கும். பெரும்பாலான பகுதிக்கு அரசு பொறுப்பு ஏற்கின்றது. மிகவும் வசதியாக இருக்கிறது என்றார் அவர்.
2008ஆம் ஆண்டு உலக வங்கி சீன அரசுடன் ஒத்துழைத்து 40 மாவட்டங்களில் கிராமப்புற சுகாதார துறை வளர்ச்சித் திட்டப்பணியைத் துவக்கியது. மேற்கூறிய சீய் மாவட்டம் இந்த 40 மாவட்டங்களில் ஒன்றாகும். உலக வங்கியின் கடன் தொகையுடன், இந்த மாவட்டங்கள் புதிய மருத்துவச் சிகிச்சை வசதிகளை வாங்கி, மருத்துவச் சிகிச்சைப் பணியாளர்களுக்குத் தரமான பயிற்சி அளித்துள்ளன. இத்திட்டப்பணியின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பிரிவின் தலைவர் சாங் சாவ்யாங் கூறியதாவது கிராமப்புறங்களில் மருத்துவக் காப்புறுதியின் அளவை விரிவாக்குவதில் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, கட்டணம் செலுத்தும் அமைப்புமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இத்திட்டப்பணி நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 6 ஆண்டுகளில், இந்த 40 மாவட்டங்களில் சுகாதார நிதி திரட்டல் மற்றும் மருத்துவச் சேவை துறைப்பணி மேலும் நேர்மையாக காணப்படுகிறது. கிராமப்புற மக்களின் மருத்துவச் சிகிச்சை செலவும் குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளது. மருத்துவச் சிகிச்சை சேவை அமைப்புமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. திட்டப்பணியின் இலக்கு பன்முகங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவின் மருத்துவச் சிகிச்சை அமைப்புமுறை சீர்திருத்த்த்துக்கு மேலதிக ஆதரவு மற்றும் உதவி அளிக்க, உலக வங்கி தொடர்ந்து சீன அரசுடன் ஒத்துழைக்கும் என்று உலக வங்கியின் சீன அலுவல் பிரிவின் தலைவர் ஹாவ் மான்ஃபூ தெரிவித்தார்.