• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் (சீஆனில்) தொடங்கும் மோடியின் பயணம்
  2015-05-14 17:19:58  cri எழுத்தின் அளவு:  A A A   

கட்டுரையாளர் பண்டரிநாதன்

2014, செப்டம்பர் 17 அன்று, பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சியைப் பெற்று வரும் 2 நாடுகளின் பெரும் தலைவர்களான இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷிச்சின்பிங்கும் ஓர் ஊஞ்சலில் ஆடியதை இந்த உலகமே வியந்து பார்த்தது. நீண்ட நாள்கள் பழகிய நண்பர்களைப் போல இரு தலைவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை ஊடகங்கள் புகழ்ந்தன.

நடைமுறையை மாற்றி, வெளிநாட்டு அதிபர் ஒருவரை நாட்டின் தலைநகர் அல்லாமல், ஒரு மாநிலமான குஜராத்தில் இந்தியப் பிரதமர் வரவேற்றது இதுதான் முதன்முறை. வரலாறு மாற்றி எழுதப்பட்டது. சபர்மதி ஆற்றங்கரை ஓரம் இயற்கைச் சூழலுடன் அமைந்திருக்கும் காந்தி ஆசிரமத்தின் ரம்மியமான அழகைக் கண்டு ஷிச்சின் பிங்கின் துணைவியும் முதல் சீன குடிமகளுமான பெங் லியுவான் வியந்துபோனார்.

மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஆமதாபாதில் ஷிச்சின்பிங்கின் இந்தியப் பயணம் தொடங்கியபோது, மோடியின் சீன பயணம், ஷிச்சின்பிங்கின் சொந்த ஊரான சிஆன் நகரில்தான் தொடங்க வேண்டும் என்று எழுதிவைக்கப்பட்டதோ என்னவோ, அவ்வாறே, எதிர்வரும் மோடியின் பயணம் தொடங்க உள்ளது.

"ஆள்காட்டி விரலால் பிறரைக் காட்டி குறை கூறும்போது, பெருவிரலைத் தவிரத்து, மூன்று விரல்களும் நம்மை காட்டுகிறது" என்ற பழமொழியை நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால்தான் என்னவோ, கடந்த கால அனுபவங்களை மறந்து, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் புதிய உறவை ஏற்படுத்த மோடி அரசு சீரிய முறையில் பங்காற்றி வருகிறது. அவ்வாறே, சீனாவும் செயல்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக, மோடி அரசு பதவியேற்றவுடன், முதல் நாடாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை நினைவுகூரலாம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, மோடி ஆய்வு நிறுவனம் என பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி மிகவும் ஆரோக்யமாக இருக்கும் என்று கணித்து அறிக்கை விட்டு வருவதை சீனாவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதனால், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது தொடர்பான முக்கியப் பேச்சு வார்த்தை மோடியின் இப்பயணத்தில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

ஷிச்சின்பிங்குக்கு ஆமதாபாதில் அளித்த உற்சாக வரவேற்புக்கு சீன ஊடகம் மற்றும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. சீன வெய்போவில் மோடி தன்னை பயன்பாட்டாளராகப் பதிவு செய்து கொண்டு இணக்கமான கருத்துகளை வெளியிட்டு வருவதில் சீன மக்கள் குறிப்பாக வெய்போ பயன்பாட்டாளர்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மோடி, எனது ஊருக்கும் வர வேண்டும் என்று வெய்போ பயன்பாட்டாளர்கள் விருப்பத்தை தெரிவித்திருப்பதில் இருந்து மோடி எப்படி கவரப்பட்டுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, சீனாவுக்கு அலுவல் ரீதியாக பலமுறை மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இது சீனாவின் நிர்வாக அமைப்பு முறை மோடியை ஈர்த்துள்ளதை வெளிப்படுத்துகிறது. மோடியின் இந்த பயணங்கள், குஜராத்தில் பல சீன நிறுவனங்கள் தோன்ற வழிவகுத்தன. "இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெறவே நான் ஹிந்தி மொழியை கற்று வருகிறேன்" என்று யுனான் மின்ஸு பல்கலைக்கழக மாணவி லீ மெய்ச்சின் கூறுவது நிதர்சனத்தைக் காட்டுகிறது. இவற்றைப் போல, மோடியின் இந்தப் பயணமும் இரு நாட்டு மக்களுக்கு பல்வேறு பயன்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான "சிஆன் நகருக்கு வராதவர், சீனாவுக்கு வந்ததாக அர்த்தமாகாது" என்று பொதுவாகக் கூறப்படுவது உண்டு. ஏனென்றால் அத்தனை சிறப்புகளை சிஆன் நகர் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால், பிரதமராக தனது சீன பயணத்தை தக்க இடத்தில் இருந்தே மோடி தொடங்க உள்ளார்.

சீனாவின் தாங் வம்சத்தில் மூத்த மதகுருமார்ரான சுவான்சாங், இந்தியாவில் புனித பயணம் மேற்கொண்டார். 10 ஆண்டுகளுக்குப் பின் சீனா திரும்பிய அவர், இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற புத்த மத நூல்களை, தாசியென் எனும் புத்த கோவிலில் மொழி பெயர்ப்பு செய்து வந்தார். சீடர்களின் வேண்டுகோளை ஏற்று புத்தர் கடவுள் பெரிய வடிவிலான வாத்து போன்ற பறவையை அளித்த இடத்தில் "பிக் வைல்டு கூஸ் பகூடா" எனும் 7 அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. சுவான்சாங்கின் மொழிபெயர்ப்பு நூல்கள் இக்கட்டடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், இக்கட்டடத்தில் ஏறி நின்று பார்த்தால் சிஆன் நகரின் முழு அழகைக் கண்டு மகிழலாம்.

காந்தி ஆசிரமத்தின் பசுமை ஷுச்சின்பிங்கின் கண்களுக்கு குளுமையை ஏற்படுத்தியதைப் போல, சிஆன் நகரின் அழகை மோடிக்கு ஷிச்சின்பிங் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆமதாபாத் வருகையின்போது மோடியின் அன்பளிப்பு உடையை ஷிச்சின்பிங் அணிந்ததுபோல, சிஆன் நகரில் மோடிக்கு ஏதாவது சிறப்பு ஆடைகள் தயாராக இருக்கவும் வாய்ப்புள்ளது.

காந்தி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த ஷிச்சின்பிங்க்கு, காந்தி பயன்படுத்திய ராட்டை குறித்து மோடி விவரித்தார். இறுதியில், ஆசிர்ம நிர்வாகிகள் அவருக்கு ராட்டை ஒன்றை நினைவுப் பரிசாகவும் வழங்கினர். அதுபோல, சிங் அரசர்காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட டெர்ரகோட்டா ராணுவ வீர்ர்கள் மற்றும் குதிரைகள் கொண்ட நினைவுப் பொருள்கள் மோடிக்கு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஆனைத் தொடர்ந்து, தலைநகர் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொள்ளும் மோடி, ஷிச்சின்பிங், சீன பிரதமர் லீ கெச்சியாங் ஆகியோருடன் இரு நாடுகளின் உறவை மேலும் வளர்த்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். தொடர்ந்து, நகரில் உள்ள முக்கியக் காட்சித் தலமான சொர்க்கக் கோயிலுக்கு லீ கெச்சியாங்குடன் செல்வார் எனத் தெரியவந்துள்ளது. மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், சீனாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தாய்ச் சீ கலையும், இந்தியாவின் பழமை வாய்ந்ததும் உன்னதுமான யோகா கலையும் சொர்க்கக் கோவிலில் அரங்கேற்றப்பட உள்ளன. இருநாடுகளின் பண்பாட்டு பரிமாற்றத்துக்கு இதுபோன் நிகழ்ச்சிகள் முக்கியப் பங்காற்றும் என சீனா கருதுகிறது.

சதுர வடிவில் இருக்கும் சொர்க்கக் கோவிலின் தெற்கு பகுதி சுவர் புவியையும், வட்ட வடிவில் இருக்கும் வடக்குப் பகுதி சுவர் சொர்க்கத்தையும் குறிக்கிறது. புவியை விட சொர்க்கமே பெரிது என்பதை குறிக்கும் வகையல் வடக்குப் பகுதி சுவரானது தெற்கு சுவரை விட பெரிதாக உள்ளது. இறை நம்பிக்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள மோடி, சொர்க்கக் கோவில் பயணத்தில் மகிழ்ச்சி கொள்வார் என்பதில் ஐயமில்லை.

மோடியின் சீன பயணத்தின் முக்கியத்துவமே, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுதான். சீனாவைத் தவிர, சர்வதேச அளவில் பொருளாதார மையமாகத் திகழும் ஷாங்காய் நகரில் தனது 3ஆவது நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் மோடி, இந்தியாவுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வணிக அலுவல் கூட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர்களை சந்திக்க உள்ளார். இதனைத் தவிர்த்து, ஆசிய அளவில் இரண்டாவது மிகப் பெரிய தொலைக்காட்சி கோபுரத்தை (1536 அடி) மோடி பார்வையிட வாய்ப்புள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான சுன் ஸுவின் "தி ஆர்ட் ஆப் வார்" நூலில், "போரைத் தவிர்ப்பதே நாட்டின் அரசனுக்கு அழகு; எதிரியின் தடையை சண்டையில்லாமல் தவிர்ப்பவனே சிறந்த தலைவன்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை மோடி நன்கு உணர்ந்து வைத்துள்ளார். மோடியினால் கோர்க்கப்பட்ட "சப் கா சாத், சப் கா விகாஸ்" (அனைவருக்குமான வளர்ச்சிக்கு அனைவரும் இணைவோம்) வாசகம் இந்தியாவுக்கானது என்றாலும், மோடியின் அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களைப் பார்க்கும்போது அது சர்வதேசத்துக்கானது எனத் தோன்றுகிறது. மோடியின் இப்பயணம், நிச்சயமாக இரு நாடுகளின் உறவிலும், வரலாற்றிலும் மைல் கல்லாக இருக்கும்

மோடியின் வெய்போ பதிவுக்கு பதிலாக சீன மக்களின் பதிவுகள் சில

ஜாவ் சிங்: இரு நாடுகள் மற்றும் தலைவர்கள் கண்டிப்பாக தோழமையுடன் இருக்க வேண்டும். இந்தியாவின் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்ள ஆவல். இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்கி உள்ளேன்.

சாம்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜாதி, அரசியல் கட்சிகள் என பல்வேறு காரணிகள் தடையாக உள்ளன. இதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திய கலாசாரத்தை காப்பாற்றும் வகையில் இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐ எம் பிஷ்: பிரதமர் மோடி வருக வருக. இந்தியா, ஒரு விந்தையான உலகம். அதனை அறிய பேராவல். இந்தியர்களின் வாழ்வு முறை மற்றும் சீனர்களைப் பற்றி அவர்களின் கருத்து என்ன என அறிய, சீனாவில் உள்ள இந்திய அமைப்பு ஒன்றில் இணைந்துள்ளேன்.

சொங் சொங்: இருநாடுகள் பயன்பெறும் வகையில் பொருளாதாரம், வர்த்தகத்தை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக பரவியுள்ள தீவிரவாத்த்தை எதிர்க்க இரு நாடுகளின் ராணுவமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஹுவா லி ஜிங்: மோடி அவர்களே, உங்கள் பயணத்தின்போது இங்கு மழை வர வாய்ப்புள்ளது. மறக்காமல் குடையை எடுத்து வரவும்.

இதனைத் தவிர, பெரும்பாலான பயன்பாட்டாளர்களின் கருத்தாக இருப்பது, தயவு செய்து எல்லைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதுதான்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040