இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் சென்று கொண்டிருந்தால் அதனை மாரத்தான் பேச்சுவார்த்தை என்று வர்ணிப்பது வழக்கம். அப்படியொரு, நீண்ட தூர ஓட்டத்தை ஓடி கடந்துள்ளார் 92 வயதுப் பெண்மனி. அதுவும் புற்றுநோயால் பாதிப்படைந்தவர். அவரது ஓட்டத்தின் பாதைகளை நாம் புரட்டிப் பார்ப்போம்.
அவரது பெயர் ஹெரிட்டீ தாம்ப்ஸன். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் சார்லோட்டி நகரைச் சேர்ந்தவர். இவர், சமீபத்தில் நடைபெற்ற ராக் அன் ரோல்ஸ் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
ஏதோ சிறிது தூரம் மட்டும் ஓடி விழிப்புணர்வை ஏற்படுத்தவார் என்றுதான் அங்கிருந்தவர்களில் பலர் நினைத்திருப்பர். ஆனால், அவர்களின் நினைப்புக்கு மாறாக 7 மணி நேரம் 24 நிமிடம் ஓடி, பந்தய தூரத்தை முழுவமதுமாக எட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால், மாரத்தான் போட்டியில் முழுமையாக ஓடிய முதல் வயது முதிர்ந்த பெண்மனி என்ற பெருமையை தாம்ப்ஸன் பெற்றுள்ளார்.
எப்படி 92 வயதில் இவரால் ஓடி முடிந்த்து என்று தோன்றுகிறதா. அதில் ஆச்சரியம் இல்லை. இதற்குமுன் இந்த மாரத்தான் போட்டியில் இவர் 16 முறை பங்கேற்றுள்ளார். அதனால் பழக்கப்பட்ட இடம், பழக்கமான போட்டி. சாதனை நிகழ்த்திய தாம்ப்ஸனுடன், அவரது மகன் பிரென்னியும் ஓடியுள்ளார்.
சாதனை ஓட்டம் குறித்து தாம்ப்ஸன் கூறுகையில், பந்தய தூரத்தைக் கடந்ததை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. ஓட்டத்தின் ஒரு கட்டத்தில் நான் மிகவும் களைப்படைந்தேன். சுமார் 21 ஆவது மைல் தொலைவைக் கடந்து ஓடும்போது, ஏதோ மலையின் மீது ஓடுவது போன்று உணர்ந்தேன். அப்போது நான் நினைத்தேன், இந்த வயதுக்கு இது தேவையா என்று. ஓட்டம் முழுவதும் எனது மகன் எனக்கு உற்சாகத்தை அளித்துக் கொண்டே வந்தார். அதனால், மலைப்பகுதியிலிருந்து சமதளத்துக்கு வருவதைப் போல உணர்ந்தேன் என்று நகைச்சுவையுடன் தனது சாகசமான ஓட்டத்தை விவரிக்கிறார். இவர் தனது முதல் மாரத்தானை 76 ஆவது வயதில் தொடங்கினாராம்.
மூன்று முறை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள தாம்ப்ஸனின் சாதனையை போற்றுவதற்கு வார்த்தை இல்லை. இந்தத் தகவலை மட்டும் கிரேக்க போர் வீரர் பெடிப்பிடெஸ் கேட்டிருந்தால் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருப்பார். பேட்டில் ஆப் மாரத்தான் பகுதியில் இருந்து ஏதென்ஸுக்கு ஓடிச் சென்று தகவலை அளித்த பெடிப்பிடெஸின் நினைவாகத்தான் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது அவர் இருந்திருந்தால், நம் ஓட்டத்தை விட, தாம்ப்ஸின் ஓட்டம் சாதனைக்குரியதுதான் என்று பாராட்டியிருப்பார்.