• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சின்ஜியாங் சர்வதேச தளவாட மையத்தின் கட்டுமானத்தில் லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதையின் பங்கு
  2015-07-04 20:22:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சுருக்கமாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனப்படும் பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத் திட்டத்தின் வளர்ச்சியுடன், சீனாவின் மேற்கு நோக்கி திறக்கும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவுக்கும் மத்திய ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கும் இடையேயான தொடர்பு மேலும் நெருக்கமாகியுள்ளது. சீனாவின் உள்பகுதியில் மிகப் பெரிய மாநிலமான சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், இதனால் கீழை உலகத்தை மேலை உலகத்துடன் இணைக்கும் மிக முக்கிய பகுதியாக மாறியுள்ளது. சிறப்பு மேம்பாடுடைய இட அமைவின் காரணமாக, பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தில் தளவாட மையமாகத் திகழும் சின்ஜியாங்கின் பங்கு நாளுக்கு நாள் முக்கியமாகி வருகிறது.

ஆனால், பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சிக்கான தேவையை, சின்ஜியாங்கின் பாரம்பரிய தளவாட மற்றும் போக்குவரத்து வசதிகள் நிறைவு செய்ய முடியாது. சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட மையத்தை உருவாக்குவதற்கு நவீன அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன. இதற்கென, சின்ஜியாங் தரைவழி துறைமுகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. சின்ஜியாங் தரைவழி துறைமுக முதலீட்டு நிறுவனத்தின் இயங்குமுறை கண்காணிப்பாளர் ச்செங் சௌ கூறியதாவது—

"சின்ஜியாங் தரைவழி துறைமுக தளவாட பூங்கா, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசு உருவாக்கும் முக்கிய தளவாட பூங்காவாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டத்தில் முன்வைக்கப்பட்ட போக்குவரத்து மையம், வணிகத் தளவாடங்கள், பண்பாடு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின்படி அது அமைக்கப்படுவதாகும்" என்று அவர் அறிமுகம் செய்தார்.

சின்ஜியாங்கை சர்வதேச தளவாட மையமாகக் கட்டியமைக்கும் வகையில், உள்நாட்டை வெளிநாடுகளுடன் இணைக்கும் தகவல் வழி கட்டுமானத்தில் சின்ஜியாங் தரைவழி துறைமுக முதலீட்டு நிறுவனம் முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. ச்செங் சௌ மேலும் பேசியதாவது—

"இணைய சேவை அமைப்பு முறையை உருவாக்குவது எமது முக்கிய கடமை. முதலில் சின்ஜியாங்கின் தொழில் நிறுவனங்களுக்குச் சேவைபுரிய வேண்டும். சின்ஜியாங்கிற்கு அப்பாலுள்ள பிரதேசங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் அதேவேளையில், சுற்றுப்புறத்திலுள்ள நாடுகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து, உள்நாட்டின் சில மாநிலங்களுக்கு வழங்குவோம். இந்தத் தகவல் வழியில் சுங்க அறிவிப்பு, தளவாடங்கள், நாணயச் சேவை உள்ளிட்ட தகவல்களை வழங்கி, சேவை தொடர் ஒன்றை உருவாக்கலாம்" என்று அவர் கூறினார்.

நவீனத் தளவாடக் கட்டுமானத்தின் வளர்ச்சியின் விளைவாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுடன் தகவல்மயமாக்க தளவாட மேடையை சின்ஜியாங் உருவாக்கியுள்ளது. சீனாவின் பல்வேறு மாநிலங்களின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு இது வசதியளித்துள்ளது. சின்ஜியாங் ஆன் லியன் சேங் தகவல் தொடர்பு தொழில் நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைமை மேலாளர் லீ கெங் செய்தியாளரிடம் கூறியதாவது—

"கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கட்டுக்கோப்பு உடன்படிக்கைகளை உருவாக்கினோம். அவற்றுக்கு இணைய முறைமையை வழங்குகின்றோம். அந்த நாடுகளில் சில நிறுவனங்களை உருவாக்கியுள்ளோம். வணிகப் பொருட்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளோம்" என்று அவர் கூறினார்.

லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதை, சின்ஜியாங்கில் முதலாவது உயர்வேக இருப்புப் பாதை என்ற முறையில், சின்ஜியாங்கை சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட மையமாகக் கட்டியமைப்பதற்கு இன்றியமையாதது.

கிழக்கிலிருந்து மேற்காக கடந்து செல்லும் லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதை, கான் சூ மாநிலம், சிங்ஹாய் மாநிலம், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் ஆகியவற்றைக் குறுக்காகக் கடந்து செல்கிறது. அதன் மொத்த நீளம் 1776 கிலோமீட்டராகும். போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட துவக்க காலத்தில், தொடர்வண்டி இப்பாதையில் ஒரு மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. சின்ஜியாங்கிற்கும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள பிரதேசங்களுக்கும் இடையேயான தொடர்பையும், பரிமாற்றத்தையும் லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதை அதிகரித்து, சின்ஜியாங்கின் போக்குவரத்து மற்றும் தளவாடத் திறனை வலுப்படுத்தியுள்ளது. இது குறித்து தளவாடத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதி சூ ஜின்லியாங் பேசுகையில்—

"லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட பின், எரியாற்றல், தகவல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சின்ஜியாங்கிற்கு பயனை அளித்துள்ளது. பட்டுப்பாதையின் மையப் புள்ளியாக விளங்கும் சின்ஜியாங்கின் எல்லைக் கோடு நீளமானது. அதற்கும், 5 மத்திய ஆசிய நாடுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்கான் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு இது வசதியாக அமையும். இரண்டாவதாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையைப் பொறுத்தவரை, உயர்வேக இருப்புப் பாதை முன்பிருந்த போக்குவரத்து திறனை உயர்த்தியுள்ளது" என்றார் அவர்.

லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதை போக்குவரத்துக்கு வந்த பின், பயணியர் தொடர்வண்டி இப்பாதையில் பயணிக்கிறது. பழைய லான்-சின் இருப்புப் பாதை, சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து திறன், முன்பை விட சுமார் ஒரு மடங்கு அதிகரிக்கும். இந்த மேம்பாட்டைப் பயன்படுத்தி, விரைவுப் போக்குவரத்து வழியைத் திறக்க இருப்புப் பாதை வாரியம் தற்போது ஆயத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தகவல்மயமாக்க மேடையுடன் ஒத்துழைத்து, சின்ஜியாங்கிற்கும் இதரப் பகுதிகளுக்கும் இடையிலான இருப்புப் பாதை போக்குவரத்துக்கு வசதியளிக்கப்பட்டு, சின்ஜியாங் தளவாட மற்றும் போக்குவரத்து மையத்தின் கட்டுமானமும் முன்னேற்றப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040