• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிறந்த நாளைக் கொண்டாட 122 கிலோ மீட்டர் ஓடிய இளைஞர்
  2015-07-20 19:33:17  cri எழுத்தின் அளவு:  A A A   

பிறந்தநாள் என்றால் பொதுவாக நம்மில் பலரும் கோவிலுக்குச் செல்வதும், பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதும்தான் வழக்கம். ஆனால், சீனாவில் லி ய் என்ற 32 வயது இளைஞர், தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கின் 4த் ரிங் ரோடு என அழைக்கப்படும் நான்காவது சுற்று வட்ட சாலையின் 122 கிலோ மீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் ஓடிக் கடந்துள்ளார்.

ஓடுவதில் அலாதி பிரியம் கொண்டவரான லீ ய், தனது ஓட்டப் பந்தய சாதனை குறித்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். வெளியிட்டவுடனே, அது பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, பெருமைகளையும், பாராட்டுக்களையும் பெற்றார்.

14 மணி நேரம் ஓடுகையில் அவர் மிகக் குறைவான அளவிலேயே தண்ணீர் எடுத்துக் கொண்டார்.

அட, பிறந்தநாளை, 4த் ரிங் ரோட் முழுவதும் ஓடுகிறாரா. அப்படீன்னா அவரைப் பாக்கனுமே, என்று கிளம்பிய பெரும்பாலான பெய்ஜிங் வாசிகள், அவருக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கவும் தவறவில்லை.

லீ ய்யின் வித்தியாசமான கொண்டாட்டமுயற்சியைக் கண்டு பலரும் வியந்து போனர். அவர் ஓடி வருகையில் வழியில் சிலர் அவருக்கு தர்ப்பூசணிப் பழங்களை அன்புடன் அளித்து ஊக்கப்படுத்தினர். இன்னும் சிலர், அவருடன் சிறிது தொலைவு ஓடி அவரை உத்வேகப் படுத்தினர்.

இதையெல்லாம் கண்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார் லீ ய். ஓட்டத்துக்குப் பின், ஆசுவாசமாக அமர்ந்து, வழிநெடுகிலும் தன்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் தனது நன்றியை சமூக ஊடகத்தின் வாயிலாக தெரிவித்து தனது நன்றிக் கடனை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், விளையாட்டு உடற்பயிற்சி நிபுணரான டியன் யுஜியாவ், இவ்வாறு ஓடுவது சிறிது ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

100 கிலோ மீட்டருக்கும் மேலான தூர ஓட்டத்தில் பங்கெடுக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அது, உடலுக்கு பெரும் விளைவைக் கூட ஏற்படுத்தும். மேலும், சாலையில் போக்குவரத்துக்கு இடையில் ஓடும்போது விபத்துக்கள் நேரிடவும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஏதாயினும், பெய்ஜிங்கில் மொத்தம் தற்போது 6 சுற்று வட்ட சாலைகள் உள்ளன. அவற்றில் தற்போது 4ஆவது சுற்றுவட்ட சாலையை அவர் ஓடி விட்டார். அடுத்தடுத்த பிறந்த நாள்களில் அடுத்த சுற்று வட்ட சாலைகளையோ அல்லது வேறு ஏதாவது சாகசத்திலோ லீ ய் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் அதனையும் சீன வானொலி நிலையம் நேயர்களுக்குத் தெரிவிக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040