• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்களின் உயர் மதிப்பைப் பெற்றுள்ள இந்திய மருத்துவர் துவார்கநாத் சாந்தாராம் கொத்னிஸ்
  2015-08-19 19:28:26  cri எழுத்தின் அளவு:  A A A   

துவார்கநாத் சாந்தாராம் கொத்னிஸ் 1910ஆம் ஆண்டு இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். மும்பையில் புகழ்பெற்ற ஜி.எஸ் மருத்துக் கல்லூரியில் பயின்றார். பிறகு, பிரிட்டிஷ் ராயல் மருத்துவ கழகத்தின் தேர்வில் அவர் வெற்றி பெற்றார்.

77 ஆண்டுகளுக்கு முன் கொத்னிஸ் சொந்த வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டத்தில் இருந்தார். பிரிட்டனுக்குச் சென்று தொடர்ந்து மருத்துவக் கல்வியில் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொத்னிஸ் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர். தவிர, அவருக்காக சொந்த ஊரில் ஒரு மருத்துவகத்தை திறக்க பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இறுதியில் அவர் எதிர்பாராத ஒரு முடிவு எடுத்தார். போரில் சிக்கியதால் மிகவும் மோசமான நிலையில் இருந்த சீனாவுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.

5 பேர் இடம்பெறும் மருத்துவ அணியில் ஒருவராக, 1938ஆம் ஆண்டு சீனாவுக்கு வந்தார். 1939ஆம் ஆண்டு பிப்ரவரி அவர் யேன் ஆன் நகருக்குச் சென்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான படைப்பிரிவின் மருத்துவக் குழுவில் சேர்ந்தார். ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போரில் கலந்து கொண்டு காயமான படையினர்களுக்கு அவர் முழு மூச்சுடன் சிகிச்சை அளித்தார். அப்பிரதேசத்தில் பரவிய ஒரு வகை தொற்று நோயை சமாளிக்க அவர் தன்னுடைய உடலையே ஆய்வுக்கு உட்படுத்தி பயன் தரும் தடுப்பு வழிமுறையைக் கண்டறிந்தார். அவரது உழைப்பு உள்ளூர் மக்கள் மற்றும் படைவீரர்களிடம் மதிப்பைப் பெற்றது. அதன்பின் அவர் பெச்சியுன் சர்வதேச அமைதி மருத்துவமனையின் தலைவராகப் பதவி ஏற்றார்.

1941ஆம் ஆண்டு அவர் உள்ளூர் மருத்துவப் பள்ளியின் ஒரு பெண் ஆசிரியரைத் திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தார். கொத்னிஸ் 1942ஆம் ஆண்டு ஜுலை திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினராக மாறினார். அதே ஆண்டு, டிசம்பர் வலிப்பு நோயினால், அவர் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார். அவ்வாண்டு அவருக்கு வயது 32.

1949ஆம் ஆண்டு, அவருடைய பூதவுடலும் அவரைப் போல் சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் பங்கெடுத்து உயிரிழந்த கனேடிய மருத்துவர் பெசியுனின் பூதவுடலும் ஷிட்சியாசுவாங் நகரிலுள்ள வடக்கு சீன தியாகிகள் நினைவுப் பூங்காவில் புதைக்கப்பட்டன. இந்தப் பூங்காவில் அவர்கள் இருவருக்கும் மட்டும் நினைவுச் சிலைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.

சீன மக்கள் அவரை என்றுமே மறக்கவில்லை. மும்பை மாநகரிலுள்ள தாஜ்மகால் உணவகத்தில் அண்மையில் ஒரு நிழற்படக் கண்காட்சி நடைபெற்றது. மும்பையிலுள்ள சீனத் துணை நிலை தூதரகமும் கொத்னிஸ் நினைவு ஆணையமும் இதனைக் கூட்டாக ஏற்பாடு செய்தன. 77 ஆண்டுகளுக்கு முன், இந்த உணவகத்திலிருந்து தான் கொத்னிஸ் 5 இந்திய மருத்துவர்களுடன் சேர்ந்து சீனாவுக்குப் புறப்பட்டார். கொத்னிஸின் குழந்தைப் பருவம், அவருடைய சொந்த ஊர், அவருடைய மருத்துவக் கல்லூரி வாழ்க்கை, சீனாவில் அவரது பங்கு முதலியவை பற்றி இந்தக் கண்காட்சியின் மூலம் மக்கள் அறிந்து கொண்டனர்.

சீனாவுக்கு வந்துசேர்ந்தவுடனே, திருமதி சுங் ச்சிங்லிங் அவரது அணியினரைச் சந்தித்து பேசினார். யேன் ஆன் நகரில் அவர் சோ என்லாய்க்குச் சிகிச்சை அளித்தார். போரின் மன்னணிக்குச் செல்வதற்கு முன் மாவ் சேதுங் அவருக்கு வழி அனுப்பினார். அவர் ஒரு சீனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.

இக்கண்காட்சியில் 1946ஆம் ஆண்டு இந்தியா தயாரித்த கொத்னிஸ் வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படமும் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் அவருடைய மனைவி கோ ட்சிங்லான் அம்மையார் ஹந்தி மொழியில் சீனாவின் நாட்டுப்பண்ணைப் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கொத்னிஸின் 3ஆவது தங்கை மனோரமா இக்கண்காட்சியைப் பார்வையிட்டார். கொத்னிஸ் இந்திய-சீன நட்புறவின் ஒரு சின்னமாக இருக்கிறார் என்று அவர் கூறினார். இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனத் தலைவர்கள் பலர் கொத்னிஸ் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைப் பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டுறவு மென்மேலும் சிறப்பாக மாறி வருகிறது. இத்தகைய கண்காட்சி அதிகமாக நடத்தப்பட்டு, இரு நாட்டுறவை மேலும் வளர்ப்பதற்கு துணை புரிய வேண்டும் என்றும் மனோரமா கூறினார்.

தனது குடும்பத்தில் இளம் தலைமுறையினர்கள் சிறு வயது முதலாகவே கொத்னிஸின் கதையைக் கேட்டு வருவதாக கொத்னிஸின் பேத்தி ஷார்மாலி போல்கா கூறினார். அவரும் ஒரு மருத்துவராவார். கொத்னிஸைப் போல் மனித குலத்துக்கும் மனித நேயத்துக்கும் சேவை புரிவது தனது விருப்பமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொத்னிஸ் பற்றி 1986ஆம் ஆண்டு சீனாவில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. தற்போது இந்திய திரைப்பட இயக்குநர் இஸ்வோல் ஏ பாத்தி ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். கொத்னிஸ் சிறப்பான மனிதராக்த் திகழ்ந்த பெருமைக்கு உரியவர். அவரின் வாழ்க்கை தனிமனித வாழ்க்கை அல்ல. பிறருக்குச் சேவை புரியும் பொதுநல வாழ்வு. கொத்னிஸ் அன்பின் தூதராவார். அன்பிற்கு எல்லை இல்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040