யோகா என்றால் உடலை வில்லாக வளைப்பது, தலைகீழாக நிற்பது என்று நாம் அறிந்திருப்போம். உடல் பருமன் குறைவாக இருந்தால்தான் அதுபோன்று செய்ய முடியும் என்று பொதுவாக பலரும் நினைப்போம். ஆனால் அது தவறு என்று நிரூபித்துள்ளார் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த வேலரி சகுன்.
இவருக்கு இயல்பாகவே உடல் பருமன் அதிகம். அதனால், தன்னால் கடினமான யோகா பயிற்சிகளை செய்ய முடியுமா என்று தொடக்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தார். ஆனால். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் யோகா பயிற்சியைத் தொடங்கி தற்போது பல கடினமான வளைவுகளைக் கூட எளிதாக புரிகிறார் வேலரி.
தனது யோகாசானத்தை ஒளிப்பதிவு செய்து இணையத்தில் இவர் வெளிவிடுவதை வாடிக்கையாக்க் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், உரிய பயிற்சி இருந்தாலே போதும், யோகாவை எத்தகைய உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களும் புரிய முடியும் என்பதற்காகத்தான் எனது யோகாசானத்தை இணையத்தில் வெளிவிடுகிறேன். என்னாலும் அனைத்து வித யோகாவை செய்ய முடியும் என்று எனது யோகா ஆசிரியர் என்னை உற்சாகப்படுத்தினார் என்று வேலரி தெரிவிக்கிறார்.
யோகா மேற்கொள்ளும்போது அலாதி இன்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை விட்டு நீங்கியது. எனது நண்பர்கள் அனைவரும் மலை ஏறும்போது நம்மால் முடியாது என்று நினைத்த்து உண்டு. ஆனால், யோகா கலையை படிப்படியாக்க் கற்ற பிறகு, என்னாலும் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று நவில்கிறார் வேலரி.
வேலரியைப் பொறுத்தவரை, யோகா என்பது மனதும், நேர்மறையான எண்ணங்களும்தான்.
இவரது இண்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இவருக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்றால் இவர் எவ்வளவு பிரபலம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சமூக ஊடகத்தின் வழியே, உடல் எடை அதிகம் கொண்டவர்கள் யோகா புரிய முடியும் என்ற எண்ணத்தை விதைக்க காரணமாக இருந்த்து மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் அவர்.
யோகாவில் புதிது புதிதான அசைவுகளை செய்ய வேண்டும் என்று பேரார்வம் கொண்டுள்ளார் வேலரி. மற்றவர்களுக்கு யோகா கற்றுத் தரும் ஆசிரியராக வேண்டும் என்பதுவே அவரின் லட்சியம். அரிசோனாவில் ஓர் யோகா மையத்தை திறக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக நிதி திரட்டலிலும் அவர் இறங்கியுள்ளார்.