80 வயதைக் கடந்த விட்ட சிலர், ஊன்றுகோல் உதவியுடன் தான் நடக்க முடிகிறது என்ற நிலைமையில் 100 வயது முதியோர் ஒருவர் தடகளத்தில் 5 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது பெயர் டான் பெல்மான். அமெரிக்காவின் சான் டியாகோவைச் சேர்ந்த இவர், இளமைக் காலத்தில் செய்யத் தவறிய செயல்களை கடைசிக் காலத்திலாவது செய்து முடித்து விட வேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ளவர்.
சமீபத்தில் இவர், உயரம் தாண்டுதல்,. நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் என 5 விளையாட்டுக்களில் உலக சாதனை புரிந்துள்ளார்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனையா. அப்படி என்றால் ஜமைக்கா வீர்ர் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்து விட்டாரா என்று நினைத்து விட வேண்டாம். 100 வயதில் வேறு யாரும் புரியாத சாதனையை பால்மான் புரிந்துள்ளார்.
தள்ளாடும் வயதில் 5 உலக சாதனைகளைப் படைத்து விட்டோம் என்று கூட அவர் பெருமைப்படவில்லை. மாறாக, இந்த நாள் எனக்கு சிறிது மோசமான நாளாக அமைந்து விட்டது. நல்லபடியாக அமைந்திருந்தால் நான் கம்பு ஊன்றி தாண்டுதலிலும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பேன் என்று வருத்தம் கொண்டார்.
பிற சாதனைகள் குறித்து அவர் கூறும்போது, திருப்திதான். அதிலும் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் எனக்கு மேலும் மன நிறைவைத் தந்துள்ளது என்கிறார்.
5 சாதனைகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சி தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும், இறுதியல் அதைப் புரிந்து விட்டேன் என்று அடக்கமாகக் கூறுகிறார்.
இதற்கு முன்னர். 2005ஆம் ஆண்டு அதாவது அவருடைய 90ஆவது வயதில் 7 சாதனைகளைப் புரிந்திருந்தது அவரது நீடித்த நிலைத்தன்மையைக் காட்டுவதாக உள்ளது.
கல்லூரியில் படிக்கும்போது உயரம் தாண்டுதல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகளில் பால்மான், ஜொலித்து வந்துள்ளார். இளமைக் காலத்தில் செய்ய நினைத்ததை எல்லாமல் எனது காலம் முடிவதற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளார். இதுவரை 127 போட்டிகளில் கலந்துள்ளார். அநேகமாக 128ஆவது போட்டியில் அவர் கம்பு ஊன்றி தாண்டி, உலக சாதனை படைத்தாலும் ஆச்சரியமில்லை.