அன்று பெரும்படங்கள் நீள் வாக்கில் கதைகள் பேசிடும் இன்று குறும்படங்கள் தான் தீக்குச்சியாய் நம்மில் மாற்றத்தை உருவாக்குகின்றன. மாற்றங்கள் என்பது வளர்ச்சியின் ஏற்றம் மட்டும் அன்று, வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பது இந்த குறும்படங்களின் நிகழ்வை கண்டுணரும் போது நமக்கு உணர்த்துகிறது.. ஆம் நீண்ட திரைப்படங்கள் உருவாக்கிய மாற்றங்களை விட இந்த குறும்படங்கள் குறுகிய நேரத்தில் நமக்குள் பல்வேறு உணர்வுகளை ஊட்டுகின்றன. அத்தகு ஒரு நிகழ்வாகத் தான் சீனாவின் உள்மங்கோலியா பிரதேசத்தின் சிபெங் நகரில் நடைபெற்ற பன்னாட்டு சீன குறும்பட விருது வழங்கும் திருவிழா நமக்கு உணர்த்தியது.
யீ, அர், சன் என்ற எண்ணிக்கையோடும் இனிய இசைப்பாடலுடனும் இனிதே தொடங்கியது. முன்னதாக துவக்க விழா உரை நிகழ்த்திய சீனவானொலியின் இயக்குனர் வாங் கெங் மின், 2012 முதல் இந்த குறும்பட விழா துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதைப் பற்றி குறிப்பிட்டார் இணையதள உலகில் குறும்படங்கள் பல்வேறு வளர்ச்சிகளையும் வரவேற்பையும் பெற்று வருவதாகவும் இதை மேலும் வளர்க்க செய்தி ஊடகங்களும் புதிய ஊடகங்களும் முன்னேடுக்க வேண்டும். மேலும் இத்தகு விழாக்கள் தலைசிறந்த படைப்புகள் வெளிக்கொணர வழிகாட்டியுள்ளது, இதன்மூலம் பல சிறந்த கலைஞர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர் இது வரவேற்க தக்கது, இத்தகு குறும்படங்கள் இணையதளம் எனும் ஒரு வழிப் பாதையால் உலக நாடுகளிடம் சென்றடைகிறது. எனவே இவை ஆக்கப்பூர்வமான திரைப்படங்களை உருவாக்கி அவை சீனாவின் வணிகம் பொது நலம் சுற்றுலா போன்ற துறைகளில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிட வழிகோலிட வேண்டும், அதே நேரத்தில் நமக்கென சுயமான தரமிக்க திரைப்படங்களை உருவாக்கி சீனாவின் குறும்படங்கள் என்ற தனி முத்திரையை உலக நாடுகளிடையே ஏற்படுத்திட வேண்டும். இத்தகு நல்முயற்சிகளுக்கு சீன வானொலி நிலையம் தனது பங்களிப்பை நிச்சயம் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, குறும்பட விழா நடைபெற்றது, விழாவின் நாயகர்களாக முதல் நான்கு இடங்களுக்கு தேர்வான இயக்குனர்களின் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு கதைகளை பேசின, அதிலும் குறிப்பாக சூரிய வெளிச்சம் எனும் திபெத்திய கதைக் களத்தை வைத்து ஒரு பெண் இயக்குனர் இயக்கிய திரைப்படம் அனைவரது கவனத்தையும் கவர்ந்து முதல் இடத்தையையும் பிடித்தது, பார்வையற்ற சிறுமியின் பார்வையையும் நேசத்தையும் அதோடு அந்த மண்மீதும் மனிதர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் பற்றையும் அந்த திரைப்படம் வெளிக்காட்டியது. இதை சரியாக உள்வாங்கிய பார்வையாளர்கள் பத்து நிமிடத்தில் தங்களின் மனதை பறிகொடுத்து சூரிய வெளிச்சம் என்ற திரைப்படத்திற்கே தங்களின் மொத்த வாக்கினையும் அளித்து பெண் இயக்குனரின் முகத்தில் சூரிய ஒளியை பிரகாசிக்க வைத்தனர். சீன வானொலியின் இயக்குனர் வாங் கெங் மின் முதல் பரிசினை அந்த பெண் இயக்குனரிடம் வழங்கினார்.
குறும்பட திரைப்பட விருது விழாவின் இடையே சிபெங் மற்றும் சீனாவின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. பார்வையாளர்களால் நிரம்பியது அந்த அரங்கம் மட்டுமல்ல பங்கேற்ற போட்டியாளர்களின் நெஞ்சமும் தான்.. பார்வையாளர்களும் தங்களது கரவொலிகளால் அரங்கத்தை அதிரவைத்தனர், விழாவில் விருந்தினர்களும் திரைப்பட துறை வல்லுனர்களும், நகரின் முக்கிய பார்வையாளர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர், நிறைவாக நகரின் பாரம்பரிய பாடலுடன் பங்கேற்ற அனைத்து குழுவினர்களும் விருந்தினர்களுடன் சேர்ந்து குழுபுகைப்படத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
குறும்படங்கள் நமக்குள் செலுத்திய நிகழ்வுகளை நாமும் மனதிற்குள் புகைப்படம் எடுத்த படியே அரங்கிலிருந்து திரும்பினோம் மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம் என்று அனைவரையும் வாழ்த்திய படி விடைபெற்றோம்.