இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையான வெளிநாட்டு வர்த்தக நிலைமை பற்றிய அறிக்கையை சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் 8ஆம் நாள் வெளியிட்டது. இவாண்டின் முதல் 11 திங்களில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகை கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 7.8 விழுக்காடு குறைவாகும். வர்த்தக சாதக நிலுவை 63 விழுக்காடு அதிகரித்து 3 இலட்சத்து 34 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது என்று இவ்வறிக்கை காட்டுகின்றது.
சர்வதேசத் தேவை குறைவு என்பது சீன வெளிநாட்டு வர்த்தக வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாகும் என்று சீனச் சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் ஆலோசனை பிரிவின் துணைத் தலைவர் வாங் ஜுன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது
சர்வதேசச் சூழ்நிலை சிக்கலான நிலையில் உள்ளது. முக்கிய நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் மட்டும் வலுவாக வளர்ச்சியுறச் செய்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்குகின்றன. பல புதிதாக வளரும் நாடுகளும் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. சர்வதேசச் சந்தையின் தேவை குறைவு என்பது ஒரு முக்கிய காரணமாகும். இரண்டாவதாக, பல்வகை வர்த்தக பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்ட்டு வருகின்றன. முழு உலகின் வர்த்தக அளவும் குறைந்து வருகின்றது. மூன்றாவதாக கச்சா எண்ணெய், இரும்பு தாது, இரும்பற்ற உலோகச் சுரங்கம் ஆகிய மூலப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக குறைந்து வருகின்றது. இதுவும் உலக வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
மேலும் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமும் குறைந்து வருகிறது. ஆகவே இறக்குமதிக்கானத் தேவையும் குறைந்து வருகிறது. இந்நிமைமையில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்று வாங் ஜுன் கருத்து தெரிவித்தார். குறுகிய காலத்தில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகையில் அதிகரிப்பு காணப்படும் வாய்ப்புகள் மிகமிக குறைவு என்று பொருளாதாரத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பொதுவாக கருதுகின்றனர்.
இந்நிலைமையில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றலை உயர்த்த, பாரம்பரிய தொழில்களின் புத்தாக்க திறமையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். செப்டெம்பர், அக்டோபர் ஆகிய இரு திங்களில் சீனாவின் இறக்குமதித் தொகையில் 10 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சரிவு காணப்படுகிறது. ஆனால், நவம்பர் திங்களில் இறக்குமதி தொகை 5.6 விழுக்காடு குறைந்துள்ளது. நிலைமை ஓரளவு மேம்பட்டுள்ளது என்று சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிபர அறிக்கை காட்டுகின்றது.