வெளியூர் பயணம் என்றால் நமக்குத் தேவையான மற்றும் அவசியமான பொருட்களை நம்முடன் எடுத்துச் செல்ல கைப்பெட்டி அவசியம். முன்பெல்லாம், மரத்திலான கைப்பெட்டிகளும், தகரத்திலான கைப்பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவையெல்லாம் பரண் மேல் உறங்கிக் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.
தற்போதைய நிலையில் கைப்படி மற்றும் சக்கரம் கொண்ட பெட்டிகளையே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், தற்போது தகரப்பெட்டிகளுக்கு நேர்ந்த கதி, கைப்படிகள் கொண்ட பெட்டிகளுக்கும் எதிர்காலத்தில் நேரிடலாம். ஏனென்றால், தற்போது கைப்பிடிகள் இல்லாமல், நாய்க்குட்டிகளைப் போல நம் பின்னாலே வரும் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோதனை முறையில் இருக்கும் இப்பெட்டிகள், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் விரைவில் வலம் வர உள்ளது.
என்யூஏ ரோபோடிக்ஸ் என்ற கைப்படி இல்லாத பெட்டியை இஸ்ரேல் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருளுக்கும், கைப்பேசியில் உள்ள பயன்பாட்டுத் தளத்துக்கும் இணைப்பு அளித்தால்போதும். நாம் செல்லும் இடம் எல்லாம் அப்பெட்டியும் நம்முடன் வரும்.
பெட்டி, நம் பின்னால்தான் வருகிறதா அல்லது யாராவது தூக்கிச் சென்று விட்டார்களா என்றும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், யாராவது பெட்டியை தொட்டாலோ அல்லது வேறு ஏதாவது தொல்லை அளித்தாலோ, அது கைப்பேசிக்கு தகவல் அளித்து விடும்.
தவிர, இப்பெட்டியில் மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் நம்மிடம் உள்ள கைப்பேசி, மடிக்கணிணி உள்ளிட்ட மின்சாதன உபகரணங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடியும்.
இந்த கைப்பிடியில்லா பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். இப்பெட்டியில் சுமார் 2.5 பவுண்ட் எடையிலான பொருள்களை வைக்க முடியும். தற்போது பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து கைப்பிடி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க அந்த நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
ஆனால், படிக்கட்டுகள் வழியாகச் செல்லும்போது இப்பெட்டி எப்படி வரும் என்பதற்கான பதில் புதிராக உள்ளது. சோதனை முறையில் உள்ள அப்பெட்டி, நடைமுறைக்கு வரும்போது அனைத்து புதிர்களுக்கும் விடை காணப்படும் என்று நம்பப்படுகிறது.