சீனாவின் ஷெஜியாங் மாநிலத்தில் உள்ள ஹங்ஜோ நகரில் 72 வயது முதியோரான லீ மங்ஷோ, வாரத்துக்கு மூன்று முறை இலவசமாக யோகா வகுப்பை நடத்தி வருகிறார். யோகா பயிற்சி மேற்கொள்வதற்கு வயது தடையல்ல என்று சீன மக்களிடையே லீ நிரூபித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த இலவச வகுப்பை லீ நடத்தி வருகிறார். அவரிடம் தற்போது 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயின்று வருகின்றனர். தவிர, 81 வயது மதிக்கத்தக்க ஒருவரும் யோகா மீது பற்று கொண்டு பயிற்சியில் பங்கெடுத்து வருகிறார்.
இது குறித்து லீ கூறுகையில், அனைத்து நிகழ்வுகளிலும் முதியோர்கள் பங்கெடுப்பதற்கு நான் உதவி அளிக்கத் தயாராக உள்ளேன். தேவையெனில் எனது யோகா வகுப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தயாராக உள்ளேன். யோகாவின் பெரும்பாலானா பயிற்சிகளை கற்றுக் கொள்ளும் வரை, தனியாக வகுப்பு நடத்த வேண்டும் என்று நான் எண்ணவில்லை. யோகாவை அதிகம் பெண்களே பயின்று வந்ததால், இதைத் தொடர, எனக்கு முதலில் கூச்சமாக இருந்த்து. ஆனால், எனது பணி ஓய்வுக்குப் பின், யோகா மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது என்று அவர் தெரிவிக்கிறார்.
எக்காரணத்துக்காகவும் யோகா வகுப்பு தள்ளி வைக்கப்படுவதில்லையாம். யோகா போட்டிகளில் பங்கெடுத்து லீ பரிசுகளையும் வென்றுள்ளார். யோகா ஆசிரியருக்கான சான்றிதழ்களையும் அவர் வைத்துள்ளார்.