2016ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் 6.5 விழுக்காடு முதல் 7 விழுக்காட்டு வரை வளர்ந்து வருகிறது. மேலும், 13ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சீனப் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6.5விழுக்காட்டுக்கு மேலான வேகத்துடன் அதிகரிக்கும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 5ஆம் நாள் சனிக்கிழமை வழங்கிய அரசுப் பணியறிக்கையில் தெரிவித்தார். இதில், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இலக்கு, பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன.
அமெரிக்காவின் செய்தியிதழ் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் இது பற்றி வெளியிட்ட கட்டுரையில், தற்போது சீனாவில் பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. உலகப் பொருளாதாரம் மந்தான வளர்ச்சியில் சிக்கியுள்ள பின்னணியில் சீன அரசு வகுக்கும் பொருளாதார வளர்ச்சி இலக்கு எதிர்பார்ப்புக்குப் பொருத்தமானது என்று கூறியது.
வரி வசூலிப்பின் பயனை உயர்த்தும் வகையிலும், வரி சுமையை குறைக்கும் வகையிலும், வணிக வரிக்குப் பதிலாக மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கும் கொள்கையை சீனா இவ்வாண்டு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் பணியறிக்கையில் அறிவித்தார். சீன வரித் துறையில் ஏற்படும் சீர்திருத்தங்களை பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது. இதனால், மதிப்புக் கூட்டு வரித் துறையில் உலகின் மிக முன்னிலையான அமைப்புமுறையை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக சீனா விளங்கும் என்று இச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.