தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது வாங் யீ சீனாவின் அடிப்படை நிலைப்பாட்டை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"நான் ஷா தீவுக் கூட்டம், சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசமாகும். புதிய உரிமைப் பிரதேச கோரிக்கையை சீனா முன்வைக்கவில்லை. முன்வைக்க போவதுமில்லை" என்றார் அவர்.
தென் சீனக் கடல் பரப்பின் ராணுவமயமாக்கம், கப்பல் பயணத்தின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகிய கூற்றுகளை அவர் மறுத்தார். தன் நாட்டின் தீவுகளில், தற்காப்பு வசதிகளைக் கட்டியமைப்பது, சர்வதேச சட்டம் வழங்கும் தற்காப்பு உரிமையாகும் என்று அவர் குறிப்பிட்டார். தென் சீனக் கடற்பரப்பில் மிகப் பெரிய கடலோர நாடாக சீனா விளங்குகிறது. இக்கடற்பரப்பில் கப்பல் பயணத்தின் சுதந்திரத்தைப் பேணிகாக்க வேண்டும் என சீனா மிகவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார். சீனா மற்றும் இக்கடற்பரப்பில் உள்ள நாடுகளின் கூட்டு முயற்சியுடன், தென் சீனக் கடற்பரப்பு, தற்போதைய உலகில் மிகவும் பாதுகாப்பான, சுதந்திரமான கப்பல் பயண நெறிகளில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
கொரியத் தீபகற்ப அணு ஆற்றல் பிரச்சினை குறித்து, வட கொரியா மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வது, தேவையான வழிமுறையாகும். இப்பிரதேசத்தின் நிதானத்தைப் பேணிகாப்பது, அவசர கடமையாகும். இதற்குப் பேச்சுவார்த்தையே அடிப்படை தீர்வு முறையாகும் என்று வாங் யீ வலியுறுத்தினார். சீன-வட கொரிய உறவு பற்றி அவர் கூறியதாவது:
"சீன-வட கொரிய உறவு, ஆழ்ந்த பாரம்பரிய நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான இயல்பான உறவாகும். வட கொரியாவுடனான பாரம்பரிய நட்புறவை சீனா பேணிமதிக்கின்றது. வட கொரியா வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வட கொரியாவுக்கு ஆதரவு மற்றும் உதவியை வழங்க சீனா விரும்புகின்றது. அதே வேளையில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையில் ஊன்றி நிற்கும் சீனாவின் நிலைப்பாடு மாறப் போவதில்லை" என்றார் அவர்.
சீன-அமெரிக்க உறவு குறித்து வாங் யீ கூறியதாவது:
"வல்லரசுகளான சீனா மற்றும் அமெரிக்கா இடையில், ஒத்துழைப்பும் சர்ச்சையும் நிலவுகின்றன. இது இயல்பானது. இதற்கிணங்க, இரு தரப்புகளுக்கிடையே பிரச்சினைகளை நேரில் எதிர்நோக்கி, தீர்த்து, ஒத்துழைப்பை விரிவாக்கி, ஆழமாக்க வேண்டும். சர்ச்சையை ஒத்துழைப்பாக மாற்ற பாடுபட வேண்டும்" என்றார் அவர்.