கடந்த 5-ஆம் நாள் தொடங்கிய 12-வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4-வது கூட்டத் தொடர் தொடங்கிய பின், சீனத் தலைமை அமைச்சர் லீ க்கேசாங் அவர்கள் வழங்கிய அரசுப் பணி அறிக்கையின் விவரங்களை சீன வானொலி மற்றும் அதன் இணையம் வாயிலாக அறிந்து கொண்டேன். பொருளாதார வளர்ச்சி சற்று தாழ்ந்துள்ளதைப் பற்றி இதில் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார் தலைமை அமைச்சர். அதே வேளையில், 2016-ஆம் ஆண்டில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.5 விழுக்காடு முதல் 7 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் என தன்னுடைய அறிக்கையில் அவர் மதிப்பிட்டுள்ளார். பல நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2 அல்லது 3 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கும் என்ற நிலையில், சீனாவின் அதிகரிப்பு, அதன் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையாளப்படுத்துவதாக உள்ளது. மேலும் சீனாவின் வறுமை ஒழிப்புப் பணி பற்றியும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதற்கு என்னுடைய வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வறுமை ஒழிப்புப் பணியும், பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புயதாகும். எனவே, வறுமை ஒழிப்புக்கு சீன மத்திய அரசு வழங்கும் நிதித் தொகை 43.5 விழுக்காடு அதிகரிப்பதால், வறுமை ஒழிப்பு இலட்சியம் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படும் என நம்புகின்றேன். தனது அறிக்கையில் பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டிய சீனத் தலைமை அமைச்சருக்கு என் நன்றி.